வருமானம் ஈட்டவே மது வியாபாரம்: அரசு மீது திருமாவளவன் காட்டம்
28 ஆவணி 2024 புதன் 02:48 | பார்வைகள் : 1139
திருச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி:
வரும், அக். 2ம் தேதி, போதைப்பொருள் மற்றும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சியில் நடத்தப்பட உள்ளது. நாடு முழுதும் மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்கப்பட வேண்டும். போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இம்மாநாட்டில் வலியுறுத்தப்படும்.
மாநாட்டை ஒட்டி, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதச்சார்பற்ற கட்சிகள், அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அதற்காக அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு, பரிந்துரைகளை வழங்கி, மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியது. மாநில அரசுகள் ஒத்துழைக்காததால், அந்த பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில், அரசே மதுபானங்கள் விற்பனை செய்யும் நிலை உள்ளது.
மது விற்பனை வாயிலாக, பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட திட்டமிடும் மாநில அரசு, அதனால் பாதிக்கப்படும் மக்களையும், குடும்பங்களையும் பாதுகாப்பதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. முழுமையான மதுவிலக்கு என்பது இருந்தால் தான், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
மாநில அரசே நல்ல சாராயம் என்ற பெயரில், மது விற்பனை செய்வதால்தான், கள்ளச்சாராயம் பற்றிய கவலை அரசுக்கும், ஆட்சி நிர்வாகத்திற்கும் இல்லாமல் போய் விடுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.