மம்தா பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டம்
28 ஆவணி 2024 புதன் 02:52 | பார்வைகள் : 980
மேற்கு வங்கத்தில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி, கோல்கட்டாவில் மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். பல்வேறு இடங்களில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்ததால், கோல்கட்டா நகரமே ஸ்தம்பித்தது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, 31 வயதான பெண் பயற்சி டாக்டர், ஆக., 9ம் தேதி, மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் அரை நிர்வாணக் கோலத்தில் இறந்து கிடந்தார்.
பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், முக்கிய குற்றவாளியான, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராயை கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
'பயிற்சி பெண் டாக்டர் மரணத்துக்கு பொறுப்பேற்று, முதல்வர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்' என, கடந்த சில நாட்களாக, கோல்கட்டாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
மாபெரும் பேரணி
இதற்கிடையே, 'முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி, 'நபன்னா' என்றழைக்கப்படும் தலைமை செயலகத்தை நோக்கி, மாபெரும் பேரணி நடத்தப்படும்' என, மாணவர்கள் அறிவித்தனர்.
இதற்கு அனுமதி மறுத்த போலீசார், முன்னெச்சரிக்கையாக நேற்று தலைமை செயலகத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தினர். தலைமை செயலகத்துக்கு வரும் வழிகளில் தடுப்புகளை அமைத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
மேலும், தலைமை செயலகம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், பாதுகாப்பு பணியில், 6,000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திட்டமிட்டபடி மாணவர்கள் நேற்று போராட்டத்தை நடத்தினர். கோல்கட்டாவின் கல்லுாரி சதுக்கம் என்ற இடத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
கல்வீசி தாக்குதல்
அப்போது, 'பெண் டாக்டர் மரணத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்' என, அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
சாலைகளில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து, தலைமை செயலகத்தை நோக்கி மாணவர்கள் செல்ல முயன்றனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கூட்டத்தை போலீசார் கலைத்தனர்.
கோல்கட்டாவில் உள்ள ஹவுரா பாலம், எம்.ஜி.ரோடு, ஹேஸ்டிங்ஸ் சாலை, பிரின்ஸ்ப் காட் உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டங்களில், போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில் இருதரப்பிலும் பலர் காயமடைந்தனர். பக்கத்து மாவட்டமான ஹவுராவிலும், மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஹவுராவின் சந்த்ராகாச்சி உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டங்களிலும், மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், முதல்வர் மம்தாவுக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதை அவர் சமாளிப்பாரா அல்லது அடிபணிவாரா என்பது புரியாத புதிராக உள்ளது.
இதற்கிடையே, மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து, மேற்கு வங்கம் முழுதும், இன்று, 12 மணி நேர 'பந்த்'துக்கு, பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, திரிணமுல் காங்., மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான சந்திரிமா பட்டாச்சார்யா கூறுகையில், ''மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாக பந்த் நடக்கவில்லை. அரசியல் ஆதாயத்துக்காக, பா.ஜ., பந்த் நடத்துகிறது,'' என்றார்.
மம்தா சர்வாதிகாரி!
முதல்வர் மம்தா பானர்ஜி சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார். பெண் டாக்டர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணையை உறுதி செய்ய, அவர் ராஜினாமா செய்ய வேண்டும். மம்தா மற்றும் கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலிடம், உண்மை கண்டறியும் சோதனையை, சி.பி.ஐ., நடத்த வேண்டும்.
-கவுரவ் பாட்டியா தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
மம்தா தான் பொறுப்பு!
அமைதியாக போராடிய மாணவர்கள் மீது, போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது. போராட்டத்தில் பங்கேற்க, ஹவுரா ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த சுபோஜித் கோஷ், பூலோகேஷ் பண்டிட், கவுதம் சேனாபதி, ப்ரீதம் சர்க்கார் ஆகிய நான்கு மாணவர்களை, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காணவில்லை. அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பது தெரியவில்லை. போலீசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என, நாங்கள் பயப்படுகிறோம். மாணவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால், மம்தா தான் பொறுப்பு.சுவேந்து அதிகாரி எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,
நான்கு மாணவர்கள் கைது!
காணாமல் போன நான்கு மாணவர்களை பற்றி, ஒரு அரசியல் கட்சி தலைவர் தவறான தகவலை தெரிவித்து வருகிறார். இன்றைய போராட்டத்தில், பெரிய அளவில் வன்முறையை அரங்கேற்ற நான்கு மாணவர்கள் திட்டம் தீட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி, பொது பாதுகாப்பு கருதி, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்த தகவல், அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.பிரவீன் குமார் திரிபாதிஹவுரா போலீஸ் கமிஷனர்