Paristamil Navigation Paristamil advert login

பரா ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வு.. 3.45 மணிநேர நிகழ்வின் கண்ணோட்டம்!

பரா ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வு.. 3.45 மணிநேர நிகழ்வின் கண்ணோட்டம்!

29 ஆவணி 2024 வியாழன் 06:00 | பார்வைகள் : 2216


நேற்று ஓகஸ் 28 ஆம் திகதி புதன்கிழமை இரவு பரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாள் நிகழ்வு மிகவும் கோலாகலமாக ஆரம்பித்தது. 

Champs-Élysées மற்றும்  Place de la Concorde ஆகிய பகுதிகளை இணைத்து பிரம்மாண்ட மேடைகள் அமைத்து இரு பகுதிகளிலும் பார்வையாளர்களை அமர்த்தி, மிக பிரம்மாண்டமாக 3 மணிநேரமும் 45 நிமிடங்களும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

பதிவுசெய்யப்பட்ட காணொளி ஒன்றில் பரா ஒலிம்பிக் வீரர் Théo Curin வாடகை மகிழுந்து ஒன்றில் தோன்றி, பரா ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் சில கருத்துக்களை வெளியிட்டதுடன் நிகழ்வு ஆரம்பித்தது. 

ஜனாதிபதி இமமனுவல் மக்ரோன், பரா ஒலிம்பிக் போட்டிகளின் தலைவர்  Andrew Parsons ஆகிய இருவரும் நிகழ்வுக்கு வருகை தந்தனர். 

அதை அடுத்து கனடாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் Chilly Gonzales, பியானோ வாசிக்க, மாற்றுத்திறனாளி நடனக்கலைஞர்கள் நடனமாடினார்கள். 

நீலம் வெள்ளை சிவப்பு என பிரெஞ்சு கொடியின் மூவர்ணத்தில் வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. 

அதை அடுத்து, ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்நாளில் ஒவ்வொரு நாட்டு வீரர்களும் படகுகளில் அணிவகுத்தது போல், நேற்று பரா ஒலிம்பிக் போட்டிகளிலும் வீரர்கள் அணிவகுத்து வருகை தந்தனர்.

சீனா, உக்ரேன், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் அணிவகுப்பின் பின்னர் பிரெஞ்சு வீரர்கள் அணிவகுத்து வருகை தந்தனர்.

1948 ஆம் ஆண்டு முதன் முதலாக பரா- ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரையான காலம் வரை ஒரு நீண்ட ‘வரலாறு’ காட்சிப்படுத்தப்பட்டது.

பின்னர் பிரெஞ்சு தேசிய கீதம் பாடப்பட்டது. கொடிகள் ஏற்றப்பட்டது. பரா ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது. 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் தலைவர் Tony Estanguet  உரையாற்றினார்.

பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான தீபம் இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்தமை அறிந்ததே. எங்கெல்லாம் அந்த தீபம் கொண்டுசெல்லப்பட்டிருந்தது என்பது தொடர்பில் ஒரு விபரணப்படம் காண்பிக்கப்பட்டது.

பின்னர் இறுதியாக 150 வரையான நடனக்கலைஞர்கள் நடனமாட, பரா ஒலிம்பிக் தீபம் மேடைக்கு கொண்டுவரப்பட்டு ஏற்றிவைக்கப்பட்டது. பெரும் உணர்வுபூர்வமான தருனமாக அது அமைந்தது.

நிகழ்வின் முடிவில் இறுதியாக  Tuileries தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இராட்சத பலூனில் பரா ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

அத்துடன் ஆரம்ப நாள் நிகழ்வு நிறைவடைந்தது. இன்று ஓகஸ்ட் 29, காலை 8.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாக உள்ளன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்