அமெரிக்காவில் கடவுச்சீட்டுக்களுக்கு பதிலாக மனித முகம்
29 ஆவணி 2024 வியாழன் 09:10 | பார்வைகள் : 1647
அமெரிக்காவில் கடவுச்சீட்டுக்கு பதிலாக முகத்தை காட்டி அவர் யார் என்பதை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் கடவுச்சீட்டில் உள்ளவர் யார் என்பதை உடனே அடையாளம் காட்டும் செயலி ஒன்றின் மூலம், எளிதாக ஒருவர் விமான நிலையங்களில் இருந்து புறப்படவோ மற்றும் வெளியேறவோ முடிகிறது.
இதேவேளை, ஐரோப்பாவிலும் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, இங்கிலாந்தில் விரைவில் இந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், வரும் ஆண்டுகளில் கடவுச்சீட்டுக்கள் மற்றும் வீசாக்கள் என எதுவுமே தேவைப்படாது என்ற நிலை மேம்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஒருவரின் முகத்தை வைத்தே, அவர் தொடர்பான தகவல்களை அறியும் வசதியை அமெரிக்கா கண்டுபிடித்து அதனை வெற்றிகரமாக செயற்படுத்தி வருகிறது.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட பிறகு பாதுகாப்பு சோதனைகளை பலப்படுத்திய அமெரிக்கா, இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் முகத்தை வைத்து ஒருவரை அடையாளம் காணும் பயோமெட்ரிக் (Biometric) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம், போலியான கடவுச்சீட்டை எவரும் பயன்படுத்தமுடியாது.
இந்நிலையில், அமெரிக்க விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இந்த திட்டத்தை 53 விமான நிலையங்களில் அறிமுகம் செய்துள்ளனர்.
அத்துடன், கப்பல்கள் வந்து செல்லும் 39 இடங்களிலும் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.