Paristamil Navigation Paristamil advert login

தீச்சட்டி ஏந்தியவாறு காணாமல் போனோரின் உறவுகள் நடந்திய போராட்டம்!

தீச்சட்டி ஏந்தியவாறு காணாமல் போனோரின் உறவுகள் நடந்திய போராட்டம்!

30 ஆவணி 2024 வெள்ளி 13:32 | பார்வைகள் : 1885


சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு உறவுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

சர்வதேச நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாபெரும் போராட்ட பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த மாபெரும் போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கையில் தீச்சட்டிகளை ஏந்தியபடி முன்செல்ல தமிழ் கட்சி சார் உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் கோசங்களை எழுப்பியபடி பின் தொடர்ந்து இப்போராட்டத்தில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

பேரணி யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பமாகி பருத்தித்துறை வீதி, ஆஸ்பத்திரி வீதி, காங்கேசன்துறை வீதி ஊடாக பயணித்து கோட்டை முனியப்பர் கோவிலடியை அடைந்துள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.

இப்பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்