'கோட்' படத்தின் கதையில் விஜய் நாயகனானது எப்படி?
1 புரட்டாசி 2024 ஞாயிறு 11:24 | பார்வைகள் : 1668
தளபதி விஜய் 'லியோ' படத்தின் ரிலீஸ்க்கு பின்னர், எந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிப்பார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் முதல் முறையாக இணைவதை உறுதி செய்தார். விஜய் நடிப்பில் உருவான படங்களிலேயே அதிகப்படியான வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு, 'தி கிரேட் ஆஃப் ஆல் டைம்' (GOAT) என பெயரிட்டுள்ளனர் படக்குழுவினர்.
செப்டம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள 'கோட்' படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் மற்றும் டிக்கெட் முன்பதிவு பணிகள் பரபரப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விஜய் தன்னுடைய 68வது படமாக நடித்துள்ள 'கோட்' படத்தில், இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
அப்பா - மகன் என விஜய் நடித்துள்ளது மட்டுமின்றி, விஜய் 15 வயதில் எப்படி இருப்பார்... 19 வயதில் எப்படி இருப்பார்? என AI தொழில்நுட்பம் மூலம் மூலம் விஜயை வைத்தே இவருடைய சிறு வயது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கி உள்ள இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ள நிலையில், மகன் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ், பிரேம் ஜி அமரன், லைலா, மைக் மோகன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து இப்படத்தில் நடித்துள்ளது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார்.
'கோட்' படத்திலிருந்து இதுவரை வெளியாகி உள்ள அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, ட்ரெய்லர் வெளியாகி இது இந்த மாதிரியான ஜானரில் எடுக்கப்பட்ட படம்? என்கிற சந்தேகத்தையும் ரசிகர்கள் மனதில் எழ வைத்தது. இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு... இது எந்த மாதிரியான படம் என்பதை ட்ரைலரிலேயே கூறி விட்டேன். ஆனால் யாராலும் கணிக்க முடியாது. அதுதான் இந்த படத்தில் ஒளிந்துள்ள ரகசியம் என்பது போல் தெரிவித்தார்.
ஆடியோ லாஞ்சே இல்லாமல் நேரடியாக திரையரங்கில் 'கோட்' படம் வெளியாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் சிறு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும், விஜய்யின் எடுத்த முடிவு தான் இது என கூறப்படுவதால்... ரசிகர்கள் தளபதியின் வார்த்தைக்கு கட்டு பட்டு மனதளவில் இதை ஏற்றுக்கொண்டனர்.
கோட் படத்தின் ரிலீஸை முன்னிட்டு, அடுத்தடுத்து பல பேட்டிகள் கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு... 'கோட்' படத்தின் கதையை முதலில் ரஜினி மற்றும் தனுஷை மனதில் வைத்து தான் எழுதியதாக அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள இவர், 'கொரோனா சமயத்தில்தான் இப்படத்தின் ஸ்பார்க் தனக்கு தோன்றியதாகவும், ரஜினி மற்றும் தனுஷை மனதில் வைத்து இப்படத்தை இயக்க திட்டமிட்டு, கதையை எழுதி முடித்தேன் என கூறியுள்ளார்.
இடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்தால் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிப்பது சாத்தியமற்றது என்பதால், விஜய்யை வைத்து இப்படத்தை இயக்க இயக்குனர் வெங்கட் பிரபு முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு வேலை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் விவாகரத்து நடைபெறாமல் இருந்திருந்தால் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தை வைத்து இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருப்பார் என கூறப்படுகிறது.