துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவர்கள்.. விழிப்புணர்வு பிரச்சாரத்துடன் இன்று பாடசாலைகள் ஆரம்பம்!
2 புரட்டாசி 2024 திங்கள் 08:00 | பார்வைகள் : 3372
இன்று செப்டம்பர் 2 ஆம் திகதி திங்கட்கிழமை புதிய கல்வி ஆண்டு ஆரம்பமாகிறது. பாடசாலைகளில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்று இன்று முதல் மேற்கொள்ளப்படுகிறது.
”பாடசாலைகளில் இடம்பெறும் துன்புறுத்தல்களை தடுப்பதே எங்களது பிரதான முன்னுரிமை. துன்புறுத்தல் என்பது விஷம் போன்றது. எங்களிடம் அதற்கான மாற்று மருந்து உள்ளது!” என பிரதமர் கப்ரியல் அத்தால் தெரிவித்தார். பாடசாலைகளில் துன்புறுத்தலுக்கு எதிரான பிரச்சார காணொளி காட்சிப்படுத்தப்படுவதுடன், அவசர இலக்கமான 3018 இனை மாணவர்களிடம் அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
பாதிக்கப்படும் மாணவர்களுக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் வரவழைப்பதுடன், அது தொடர்பில் புகார் அளிக்கக்கூடிய வகையிலும் இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, Issy-les-Moulineaux (Hauts-de-Seine) நகரில் உள்ள Jean de la Fontaine பாடசாலைக்கு இன்று காலை செல்லவுள்ள கல்வி அமைச்சர், அங்கு மாணவர்களுக்கு இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.