இலங்கையின் குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேற அவசரப்பட வேண்டாம் - ரணில் கோரிக்கை
4 புரட்டாசி 2024 புதன் 14:11 | பார்வைகள் : 2527
இலங்கையின் குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேற அவசரப்பட வேண்டாம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிலைமை மேம்பட்டு நாடு டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி முன்னேறி வருகிறது என்றும் தெரிவித்தார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் நீண்ட வரிசையில் நிற்பது குறித்து நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய இ-பாஸ்போர்ட் இன்னும் இரண்டு வாரங்களில் கிடைக்கும் என்றார்.
குடிவரவுத் திணைக்களத்தில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு மன்னிப்புக் கோரிய ஜனாதிபதி, அரசாங்கம் வழமையான கடவுச்சீட்டில் இருந்து இ-பாஸ்போர்ட்டுக்கு மாறுவதாக விளக்கமளித்தார்.
கொள்முதல் செயல்பாட்டில் தாமதம் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட அவர், அரசின் சார்பில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தற்போதைய கடவுச்சீட்டு தட்டுப்பாடு குறித்து விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், ஒக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் கிடைக்கும் என்றும், பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மேலதிக கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு திணைக்களம் செயற்பட்டு வருகின்றதுடன், தற்போதுள்ள கடவுச்சீட்டை விட இ-பாஸ்போர்ட் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
டிஜிட்டல் மயமாக்கலின் அடுத்த கட்டத்திற்கு அரசு முன்னேறி வரும் நிலையில், பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.