இலங்கையில் சவர்க்காரம், ஷாம்பூக்கள் குறித்து அதிரடி நடவடிக்கை

5 புரட்டாசி 2024 வியாழன் 09:09 | பார்வைகள் : 3838
அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து சோப்புகள், ஷாம்புகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
இலங்கை தர நிர்ணய பணியகத்தின் பரிந்துரைகளின்படி, இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் சோப்புகளின் TFM பெறுமதி 78 ஆக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், நாட்டில் உள்ள பிரதான சோப்பு உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட குழந்தை சோப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை பரிசோதித்த போது அதன் TFM பெறுமதி 63 என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிறுவனமும் ஏனைய நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்ட TFM பெறுமதியுடன் சோப்பை உற்பத்தி செய்கின்றனவா என்பதை அவ்வப்போது பரிசோதிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை ஏற்பாடு செய்துள்ளது.
குழந்தையின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM மதிப்புள்ள குழந்தை சோப்பை தயாரித்ததற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நிறுவனம் தொடர்ந்து தரம் குறைந்த சோப்பை தயாரித்தால் இதன் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.