Paristamil Navigation Paristamil advert login

தளபதி விஜய் சாதித்தாரா?

தளபதி விஜய் சாதித்தாரா?

5 புரட்டாசி 2024 வியாழன் 11:24 | பார்வைகள் : 849


விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கும் போது அவர்களது ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும், அவருக்கென இருக்கும் குட்டீஸ் முதல் குடும்பத்தினர் வரை இருக்கும் ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அப்படியெல்லாம் யோசித்து காட்சிகளையும், திரைக்கதையையும் அமைக்க வேண்டும். அப்படி அனைவருக்குமான ஒரு படமாக இருக்கிறது இந்த 'கோட்'.

ஸ்பெஷல் ஆன்ட்டி டெரரிஸம் ஸ்குவாடு, சுருக்கமாக 'சாட்ஸ்'. இந்திய நாட்டிற்காக உளவு பார்த்து எதிரிகளை அவர்களிடத்திற்கே சென்று அழிக்கும் ஒரு குழு. அதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் முக்கியமான குழுவினர். அவர்களுக்குத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஜெயராம். அக்குழுவின் முன்னாள் தலைவரான மோகன், பணத்திற்காக மோசடி செய்து மாட்டிக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறியவர். அவரை கென்யாவில் வைத்து கொலை செய்கிறது விஜய் தலைமையிலான குழு. அடுத்த ஆபரேஷனுக்காக தாய்லாந்து செல்ல வேண்டும். கர்ப்பிணி மனைவி சினேகாவின் தொல்லை தாங்காமல் அவரையும், நான்கு வயது மகனையும் அழைத்துக் கொண்டு செல்கிறார். அங்கு நடந்த ஒரு எதிர் தாக்குதலில் கர்ப்பிணி சினேகாவை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய சூழ்நிலை. அப்போது நான்கு வயது மகன் காணாமல் போகிறார். கடத்தியவர்களுடன் அந்த மகனும் விபத்தில் இறக்கிறான். 2008ல் நடந்த அந்த சம்பவத்திற்குப் பிறகு தற்போது 2024ல் விஜய், சினேகா பிரிந்து வாழ்கிறார்கள். மாஸ்கோவில் ஒரு வேலைக்காக சென்ற போது அங்கு தன்னைப் போல உள்ள ஒரு இளம் விஜய்யை சந்திக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இரட்டை வேடப் படங்கள் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் காலத்திலிருந்தே வந்து கொண்டிருக்கிறது. அப்பா - மகன், அண்ணன் - தம்பி என்பதுதான் அப்படியான இரட்டை வேடக் கதாபாத்திரங்கள் அமைக்கப்படும. இந்தப் படத்தில் அப்பா, மகன். அந்தக் கால இரட்டை வேடப் படங்களுக்கும், இந்தக் கால இரட்டை வேடப் படங்களுக்கும் 'ஏஐ' தொழில்நுட்பத்தால் எவ்வளவு மாற்றம் வந்துள்ளது என்பதைப் பார்க்கும் போது வியக்க வைக்கிறது. 90களின் துவக்கத்தில் நாயகனாக விஜய் அறிமுகமான போது எப்படி இருந்தாரோ அப்படி ஒரு விஜய்யை மீண்டும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். வெங்கட் பிரபுவின் எண்ணங்களுக்கு அப்படியே திரையில் உயிர் கொடுத்திருக்கிறார் விஜய். அப்பா விஜய் கவர்கிறாரா, மகன் விஜய் கவர்கிறாரா என்பதில் ரசிகர்களிடையேயும் ஒரு போட்டி இருக்கும். அதிரடியும், அமைதியும் கலந்தவர் அப்பா என்றால், அதிரடியும், ஆர்பாட்டமும் கலந்தவர் மகன். 30 வருடங்களுக்கு முன்பு இருந்த உடல்மொழி, வசன உச்சரிப்பு, ஸ்டைல் ஆகியவற்றை இப்போது கொண்டு வந்து நடிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. அப்பா காந்தி ஆக, மகன் ஜீவன் ஆக இரண்டு வேடங்களிலும் ஆல் டைம் பேவரிட் ஆகத் தெரிகிறார் விஜய்.

90களில் கலக்கிய பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் விஜய்யுடன் இந்தப் படத்தில் இணைந்திருப்பது ஒரு மல்டிஸ்டார் ஆச்சரியம். அவர்களுக்கான முக்கியத்துவத்தை சரியாகவே கொடுத்திருக்கிறார்கள். 'நீ பிறக்கிறதுக்கு முன்னாடி இருந்தே அவன் என் நண்பன்டா,' என பிரசாந்த் சொல்லும் ஒரு காட்சி போதும் அவர்களது நட்பைப் புரிய வைக்க. பிரபுதேவாவின் கதாபாத்திரத்தில் இருக்கும் சர்ப்ரைஸ் நாம் எதிர்பார்க்காத ஒன்று. ஜெயராம், அஜ்மல் கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் இடம் பிடிக்கும்படியான கதாபாத்திரம்.

மகன் விஜய்க்கு ஜோடி வேண்டும் என்பதற்காக மீனாட்சி சவுத்ரி. கொஞ்சம் முத்தம், கொஞ்சம் நடனத்துடன் முடித்துக் கொள்கிறார். அப்பா விஜய் ஜோடியாக சினேகா. ஆரம்பக் காட்சிகளில் கணவன், மனைவியின் பாசம் சுவாரசியம். முக்கிய வில்லன் மோகன், ஆனால், சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். லைலா, வைபவ், பிரேம்ஜி ஆகியோரும் படத்தில் உண்டு. யோகிபாபு சில காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைத்துவிடுகிறார். அதிலும் காந்தி, நேரு, போஸ் காட்சி காமெடி சிரிப்பான சுவாரசியம்.

வெளியீட்டிற்கு முன்பு யுவன் இசையில் வந்த பாடல்களில் சில எதிர்கருத்துக்கள் வந்தன. படத்துடன் பார்த்த போது அவை பறந்து போய்விடும். சில பாடல்களின் 'பிளேஸ்மென்ட்' சரியாக இல்லை என்றாலும் அதிரடியாக அமைந்துள்ளன. பின்னணி இசையில் வழக்கம் போல தெறிக்கவிட்டுள்ளார். 'மட்ட' பாடலில் ரசிகர்கள் எதிர்பார்த்த நாயகி வந்து போகிறார். சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவில் சேஸிங் காட்சிகளின் படமாக்கம் அசத்தல். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சிஎஸ்கே மேட்ச் இடையே பரபரப்பான படப்பிடிப்பு. மூன்று மணி நேரம் போவது தெரியவில்லை. இருந்தாலும் ஆரம்பக் காட்சிகளில் கொஞ்சம் செதுக்கி இருக்கலாம்.'ஏஐ' தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்திய முதல் தமிழ்ப் படம் என்ற பெரைப் பெறும்.

மகன் விஜய்யின் கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மைதான் படத்தின் குறையாக உள்ளது. என்னதான் இருந்தாலும் இப்படியெல்லாமா நடந்து கொள்வார் என்று கேட்க வைக்கிறது. அதற்கு இன்னும் ஒரு அழுத்தமான காரணத்தை வைத்திருக்கலாம். ஹீரோயிசப் படங்களில் வழக்கம் போல ஆங்காங்கே உள்ள லாஜிக் குறை இதிலும் உள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்