வங்காளதேசத்தின் சிறுபான்மை இந்துக்களுடன் இந்தியா துணை நிற்க வேண்டும் - பாபா ராம்தேவ்
7 ஆவணி 2024 புதன் 03:13 | பார்வைகள் : 1171
வங்காள தேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் வங்காள தேச ராணுவம் அங்கு இடைக்கால அரசு அமைக்க உள்ளதாகவும் ராணுவத் தளபதி நேற்று முன்தினம் அறிவித்தார். தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் வங்காள தேச நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்த நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் அறிவித்தார்.
ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகும் அந்நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. காவல் நிலையங்கள், அரசு கட்டிடங்கள், ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களின் வீடுகள், இந்து கோவில்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பல கட்டிடங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வங்காளதேசத்தின் சிறுபான்மை இந்துக்களுடன் இந்தியா துணை நிற்க வேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "வங்காளதேசத்தில் இந்துக்களின் வீடுகள், கோவில்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அடிப்படைவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்துவது மிகவும் வெட்கக்கேடானது.
வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்து சகோதரர்களுடன் இந்தியா துணை நிற்க வேண்டும். அங்குள்ள இந்து சகோதரர்களின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் இந்தியா விழிப்புடன் செயல்பட வேண்டும். வங்காளதேசத்தை உருவாக்குவதற்கு நாம் உதவி செய்தோம். அங்குள்ள இந்துக்களை பாதுகாப்பதிலும் நமது வலிமையை நாம் காட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.