இயல்பு நிலைக்கு திரும்பும் வயநாடு
9 ஆவணி 2024 வெள்ளி 03:15 | பார்வைகள் : 1243
கேரளாவின் வயநாட்டில் கனமழை கொட்டியதை அடுத்து, கடந்த 30ம் தேதி அதிகாலை அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலும் அழிந்தன. அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரி மலை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த பேரிடரில், பெண்கள், குழந்தைகள் உட்பட நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணியிலும், மாயமானவர்களை தேடும் பணியிலும் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, மீட்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியதை அடுத்து, ராணுவப் படையின் ஒரு குழுவினர் நேற்று வயநாட்டில் இருந்து புறப்பட்டனர். அவர்களை வழியனுப்பிய பொதுப்பணித் துறை அமைச்சர் முஹமது ரியாஸ் கூறியதாவது:
மீட்புப் பணிக்கு வந்த ராணுவ வீரர்கள் தங்கள் கடமையை முழு அர்ப்பணிப்புடன் செய்தனர். அவர்கள் வந்த பின், எந்த உயிரையும் நாங்கள் இழக்கவில்லை. வயநாடு மக்கள் சார்பில் அவர்களுக்கு நன்றி. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதியில் இயல்பு நிலை வேகமாக திரும்பி வருகிறது.
இவ்வாறு கூறினார்.