மத்திய கிழக்கு நோக்கி விரையும் அமெரிக்க போர் கப்பல்கள்
12 ஆவணி 2024 திங்கள் 10:08 | பார்வைகள் : 1734
இஸ்ரேலிய உளவுத்துறையின் புதிய அறிக்கையின் படி அமெரிக்க போர் கப்பல்கள் மத்திய கிழக்கு நோக்கி விரைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஞாயிறன்று ஏவுகணை நீர்மூழ்கி கப்பல் ஒன்றை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி வைக்க அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் உத்தரவிட்டார். அத்துடன் விமானம் தாங்கும் போர் கப்பலான USS Abraham Lincoln மத்திய கிழக்கு நோக்கி விரைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தளபதி ஒருவருடன் லாயிட் ஆஸ்டின் ஆலோசனை முன்னெடுத்த சில மணி நேரங்களில் அமெரிக்கா போர் கப்பலை மத்திய கிழக்கு நோக்கி அனுப்பி வைத்துள்ளது.
ஈரானின் ராணுவ தயாரெடுப்புகள் அனைத்தும், மிகப்பெரிய போருக்கான ஒத்திகை என்றே இஸ்ரேல் உளவுத்துறை கருதுவதாக லாயிட் ஆஸ்டினிடம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் படைகளின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு ஈரான் பழி தீர்க்க முடிவு செய்துள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. பொதுவாக ஒரு தீவிர முடிவெடுக்க ஈரான் பல நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
அந்த வகையில், இஸ்ரேல் மீதான தாக்குதல் இன்னும் சில நாட்களில் முன்னெடுக்கப்படலாம் என்றே உளவு அமைப்புகளின் கணிப்பாக உள்ளது. இந்த நிலையில், எந்த நெருக்கடியான நிலையிலும் இஸ்றேலை பாதுகாக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை என்றே லாயிட் ஆஸ்டின் அறிவித்துள்ளார்.
மட்டுமின்றி, மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ பலத்தை அதிகரிக்க செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசியா பசிபிக் கடற்பகுதியில் நங்கூரமிட்டிருந்த USS Abraham Lincoln எவ்வளவு விரைவாக மத்திய கிழக்கில் சென்றுவிடும் என்ற தகவல் வெளியாகவில்லை.
சக்தி வாய்ந்த போர் கப்பல்களை அமெரிக்கா இதுபோன்று நகர்த்துவது என்பது மிக மிக அரிதான சம்பவம் என்றே கூறப்படுகிறது. ஈரானின் தாக்குதலை எதிர்பார்த்தே அமெரிக்க அதிகாரிகள் தரப்பு காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹிஸ்புல்லா தரப்பு முதலில் ஆரம்பித்து வைக்க, ஈரான் அவர்களுடன் இணைந்து தாக்குதலை தொடுக்கும் என்றே தகவல் கசிந்துள்ளது.