கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
14 ஆவணி 2024 புதன் 08:37 | பார்வைகள் : 1480
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது.
டில்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை, சிபிஐ தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தன்னை சி.பி.ஐ., கைது செய்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 14) நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் சிபிஐயின் கருத்துகளை பெறாமல் உடனே இடைக்கால ஜாமின் வழங்க முடியாது என கூறி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆம் ஆத்மி எதிர்பார்ப்பு
இந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து, 17 மாத சிறைவாசத்துக்குப் பின், அவர் விடுதலை செய்யப்பட்டார். இதேபோல் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இன்று ஜாமின் கிடைக்கும். நாளைக்கு அவர் சுதந்திர தினத்திற்கு தேசிய கொடி ஏற்றுவார் என ஆம்ஆத்மியினர் எதிர்பார்ப்பு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் ஏமாற்றத்தில் முடிந்தது.