இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இங்கிலாந்தின் முன்னாள் வீரர் நியமனம்

14 ஆவணி 2024 புதன் 09:55 | பார்வைகள் : 4027
இங்கிலாந்தின் முன்னாள் வீரரான இயான் பெல் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் 21ஆம் திகதி தொடங்குகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக முன்னாள் வீரர் இயான் பெல்லினை துடுப்பாட்ட பயிற்சியாளராக இலங்கை அணி நியமித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட்டின் CEO ஆஷ்லே டி சில்வா கூறுகையில், "இங்கிலாந்தில் நிலைமைகள் குறித்த முக்கிய நுண்ணறிவுகளுடன் வீரர்களுக்கு உதவ, உள்ளூர் விவரம் அறிந்த ஒருவரைக் கொண்டுவர இயானை நியமித்தோம்.
இயானுக்கு இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் அதிகம், மேலும் அவரது உள்ளீடுகள் இந்த முக்கியமான சுற்றுப்பயணத்தில் எங்கள் அணிக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
இயான் பெல் (Ian Bell) இங்கிலாந்து அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7,727 ஓட்டங்கள் குவித்திருக்கிறார். அதில் 22 சதங்கள், 46 அரைசதங்கள் அடங்கும்.