போரின் தாக்கத்தை ரஷ்யா உணர வேண்டும் - உக்ரைன் தரப்பு
15 ஆவணி 2024 வியாழன் 09:42 | பார்வைகள் : 2072
கடந்த வாரம் எவரும் எதிர்பாராத நடவடிக்கையாக உக்ரைன் ராணுவம் சுமார் 1000 பேர்கள் ரஷ்ய எல்லையை கடந்து தாக்குதலை முன்னெடுத்தனர். வெறும் 10 நாட்களில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர் பரப்பளவு ரஷ்ய மண்ணைக் கைப்பற்றியுள்ளனர்.
இது ரஷ்யாவின் முகத்தில் விழுந்த அடியாகவே பார்க்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் சொந்த மண்ணில் ரஷ்யாவின் மிக மோசமான தோல்வி இதுவென்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மட்டுமின்றி, ரஷ்யாவை அரண் போல காக்கும் மிக வலுவான நபர் என்ற விளாடிமிர் புடினின் பிம்பம் சுக்கலாக நொறுங்கியுள்ளது என்றும் குறிப்பிடுகின்றனர்.
துணிச்சலான நடவடிக்கையால் உலக நாடுகளின் கவனத்தை உக்ரைன் தங்கள் பக்கம் திருப்பியுள்ளதுடன், போரின் போக்கையே முற்றிலுமாக மாற்றியுள்ளது.
பல மாதங்களாக தோல்வியில் புதைந்து போன உக்ரைன், தனது மண்ணை கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்யாவிடம் இழந்து வந்தது.
ஆனால் தற்போது உக்ரைன் புதிய உத்வேகம் பெற்றுள்ளது.
உக்ரைனால் முடியாது என்று நிபுணர்களால் கூறப்படு வந்ததை தற்போது சாதித்துள்ளனர். எவரும் எதிர்பாராத சாதனை இது என்கிறார்கள் நிபுணர்கள். மட்டுமின்றி, ரஷ்யாவை எவராலும் வெல்ல முடியாது என்ற கட்டுக்கதையை மொத்தமாக அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.
இது உக்ரைனுக்கு கிடைந்துள்ள மிக முக்கியமான வெற்றி. பொதுவாக வெற்றியாளர்களுக்கே ஆதரவு கிட்டும், தற்போது அந்த வெற்றியை உக்ரைன் பெற்றுள்ளது, அந்த நாட்டுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது உலக நாடுகளின் கடமை என்றும் போர் குறித்த நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.