ஆந்திராவில் 5 ரூபாய் சாப்பாடு : பழைய திட்டம் மீண்டும் துவக்கம்
16 ஆவணி 2024 வெள்ளி 03:03 | பார்வைகள் : 1295
அமராவதி, ஆந்திராவில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் நேற்று மீண்டும் துவங்கப்பட்டது.
ஆந்திராவில் 2017ல், தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, ஏழைகள் பயனடையும் வகையில், 'அண்ணா கேன்டீன்' திட்டம் துவக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களை போல், ஆந்திராவில் துவக்கப்பட்ட இந்த மலிவு விலை உணவகங்களில் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும், 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்பட்டது.
எனினும், அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு, இந்த திட்டத்தை ரத்து செய்தது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது தெலுங்கு தேசம் கட்சி, தங்கள் தேர்தல் அறிக்கையில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் அண்ணா கேன்டீன்கள் திறக்க நடவடிக்கை எடுப்போம்' என வாக்குறுதி அளித்திருந்தது.
இதற்கிடையே சட்டசபை தேர்தலில் வென்று, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான புதிய அரசு ஆந்திராவில் ஆட்சி அமைத்தது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி நேற்று அண்ணா கேன்டீன்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
விஜயவாடாவில் உள்ள அண்ணா கேன்டீனை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று துவக்கி வைத்தார். முதற்கட்டமாக 14 மாவட்டங்களில் மொத்தம் 100 அண்ணா கேன்டீன்கள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளன.
காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும் என்றும், இந்த திட்டத்தால் தினமும் ஒரு லட்சம் பேர் பயனடைவர் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.