திருப்பதி லட்டு விவகாரத்தை பேச வைத்தவர் கடவுள்: சொல்கிறார் சந்திரபாபு நாயுடு!
22 புரட்டாசி 2024 ஞாயிறு 06:41 | பார்வைகள் : 1237
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து நான் பேச வேண்டும் என கடவுள் விரும்பினார்,'' என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு கூறியது அம்மாநில அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சந்திரபாபு குடும்பத்துடன் வந்து கோயிலில் சத்தியம் செய்ய தயாரா என கேள்வி எழுப்பி உள்ளது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: தனது லட்டு பிரசாதம் குறித்து நான் பேச வேண்டும் என கடவுள் விரும்பினார் என்று நான் நினைக்கிறேன். நாம் அனைவரும் வெறும் கருவிகள் தான். கடவுள் தான் அனைத்தையும் செய்கிறார். இது எனது ஆழமான நம்பிக்கை. டெண்டர் சீரமைப்பு என்ற பெயரில், எப்படி நெய்யின் தரத்தில் சமரசம் செய்ய முடியும். கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும், புனிதமான வழிபாட்டு முறையையும் நாம் உறுதி செய்ய வேண்டும். கோயிலுக்கு தரம் குறைந்த நெய்யை விநியோகித்தவர்கள் ஒருவரையும் விட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.