புதிய உள்துறை அமைச்சர் Bruno Retailleau எப்படியானவர்?
22 புரட்டாசி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 4025
பிரான்ஸ் அரசில் பிரதமருக்கு பின்னர் முக்கிய அமைச்சாக கருதப்படுவது உள்துறை அமைச்சு, இந்த அமைச்சு பொறுப்பில் கடந்த 2020 முதல் உள்துறை அமைச்சராக இருந்தவர் Gérald Darmanin அவருக்கு பின்னர் புதிய அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள Bruno Retailleau, இவர் எப்படியான கொள்கையைக் கொண்டவர் என ஆராயப்பட்டு வருகிறது.
முதிர்ந்த அரசியல் அனுபவம் மிக்கவர், வலுவான ஆளுமை கொண்டவர், பழமைவாத வலதுசாரி கொள்கையை பின்பற்றுபவர் ஆனாலும் நீண்ட மற்றும் கசப்பான விவாதங்களுக்குப் பிறகே இவர் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
François Hollande அவர்களின் இடதுசாரி ஆட்சிக்காலத்தில் குடியேற்ற வாசிகளுக்கு இலகுவாகப்பட்ட சட்டங்களை ஒழிக்கவேண்டும் என்பதில் தீவிரமான இவர், வெளிநாட்டவர்கள் வரவையும், பிரான்சில் உள்ள வெளிநாட்டவர்கள் குடும்ப இணைப்பையும் கடுமையாக்க வேண்டும் என்பதிலும் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளையோரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் குடும்ப கொடுப்பனவுகளை ரத்து செய்தல் சரியான செயல் என்பதிலும் வலுவான கொள்கை கொண்டவர் எனவும் கூறப்படுகிறது.
மேலும் அரச தலைவராக François Hollande அவர்கள் ஆட்சிசெய்த ஐந்தாண்டு காலத்தில் கொண்டு வரப்பட்ட
'mariage pour tous' அதாவது "அனைவருக்கும் திருமணம்" எனும் மசோதாவுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தவர் எனவும் நினைவு கூறப்படுகிறது.
அவரின் இயற் பெயர் Bruno Daniel Marie Paul Retailleau, 20 நவம்பர் 1960 இல் பிறந்த இவர் வலதுசாரி கொள்கையால் ஈர்க்கப்பட்டு முதலில் 1994 முதல் 2010 வரை Mouvement pour la France (MPF) எனும் அரசியல் கட்சியில் செயல்பட்டவர் பின்னர் இன்றைய les Républicains கட்சியின் தோற்றமான L'Union pour un mouvement populaire (UMP) கட்சியில் 2012 முதல் 2015 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பின்னர் 2015 முதல் Les Républicains (LR) கட்சியில் தொடர்ந்து வருகிறார்.