பரிசில் கொல்லப்பட்ட மாணவி.. ஜெனீவாவில் ஒருவர் கைது!
25 புரட்டாசி 2024 புதன் 07:06 | பார்வைகள் : 4256
பரிசில் கல்விகற்று வந்த இளம் பெண் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டு, மேற்கு பரிசில் உள்ள Bois de Boulogne பூங்காவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது.
அவர் கொல்லப்பட்டு, அதன் பின்னர் புதைக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை தேடிவந்த காவல்துறையினர், நேற்று செப்டம்பர் 24, செவ்வாய்க்கிழமை ஜெனீவா (Genève) நகரில் வைத்து 22 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.
மொரோக்கோ நாட்டு குடியுரிமை கொண்ட அவர், குறித்த இளம் பெண்ணைக் கொலை செய்தமைக்குரிய ஆதாரங்கள் கிடைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட மாணவி Paris-Dauphine பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தவர் எனவும், வெள்ளிக்கிழமை நண்பகல் அவர் Bois de Boulogne பூங்காவில் நடந்து சென்றதற்குரிய கண்காணிப்பு கமராக்களின் ஆதாரங்கள் கிடைத்ததாகவும், அதன் பின்னர் கொல்லப்பட்ட பெண்ணின் வங்கி அட்டையில் இருந்து Montreuil-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் உள்ள ATM இயந்திரத்தில் அன்று மாலை பணம் எடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பணத்தை எடுத்த நபர் யார் என்பது தொடர்பில் ஆராய்ந்து, விசாரணைகளை மேற்கொண்டு, பரிசில் இருந்து தப்பி ஓடி ஜெனீவாவில் தஞ்சம் புகுந்த குறித்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.