இந்தியா பற்றி அவதூறு; ராகுல் பாஸ்போர்ட் ரத்து செய்ய கேட்கிறது பா.ஜ.,
25 புரட்டாசி 2024 புதன் 03:20 | பார்வைகள் : 1101
அமெரிக்காவில் இந்தியாவை அவதூறாகப் பேசியதற்காக, ராகுலின் பாஸ்போர்ட்டை ரத்துது செய்ய கோரி பா.ஜ., சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த ராகுல், பல்கலை மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம், சீக்கியர்களின் நிலை மற்றும் இடஒதுக்கீடு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ராகுல் முன் வைத்தார். இதற்கு பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கண்டனம் தெரிவித்தன. சீனாவை ஊக்குவிக்கிறது. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவதூறாக பேசியவதா? என பா.ஜ., குற்றம் சாட்டியது.
சரியானது அல்ல
தற்போது, லோக்சபா சபாநாயகருக்கு பா.ஜ., எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராகுல் தனது பதவியை தவறாகப் பயன்படுத்துகிறார். அவர் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகன் என்ற முறையில் ராகுல் வெளிநாட்டு மண்ணில், இந்தியாவை அவதூறாக பேசுவது எந்த வகையிலும் சரியானது அல்ல. இது போன்ற கருத்துக்களை ராகுல் கூறுவதால், நாட்டின் சர்வதேச உறவுகளைப் பாதிக்கக்கூடும்.
ரத்து செய்யுங்க!
இது தேச விரோதச் செயல். நாட்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதை, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது. ராகுலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவில் சீக்கியர் குறித்து நான் பேசியதில் தவறு உள்ளதா என இந்தியா மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் சீக்கியர்கள் கூற வேண்டும் என ராகுல் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.