பரிஸ் : கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவர் பலி!
25 புரட்டாசி 2024 புதன் 09:00 | பார்வைகள் : 2346
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Versailles (Yvelines) நகரைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 1978 ஆம் ஆண்டு பிறந்த போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஒருவரே பலியாகியுள்ளார். அவர் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் தற்போது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ’முக்கோண கோபுரம்’ என பெயரிடப்பட்டுள்ள கட்டிடத்தின் பத்தாவது தளத்தில் நேற்று செப்டம்பர் 24, செவ்வாய்க்கிழமை காலை பணியில் ஈடுபட்டிருந்த போது, இரும்பு தூண் ஒன்று அவரது தலையில் விழுந்து பலியானதாக அறிய முடிகிறது.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
இரும்பு தூண் விழுந்தமைக்குரிய காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. இது ஒரு விபத்து எனவும், இரண்டாம் நபர் தலையீடு சம்பவத்தின் போது இல்லை எனவும், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடத்தில் நாள் ஒன்றுக்கு 350 பணியாளர்கள் பணிபுரிகிறமை குறிப்பிடத்தக்கது.