மொசாட் தலைமையகத்தை குறிவைத்த ஹிஸ்புல்லா அமைப்பு
25 புரட்டாசி 2024 புதன் 09:07 | பார்வைகள் : 1530
இஸ்ரேலின் உளவு அமைப்பான Mossad தலைமையகம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இஸ்ரேல்-லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையிலான தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
இரேலிய ராணுவம் கடந்த சில நாட்களாக லெபனான் மீது நடத்தி வரும் வான்வழி தாக்குதலில் இதுவரை 569 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லெபனான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் அருகே உள்ள உளவு அமைப்பான Mossad தலைமையகத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தி இருப்பதாக அறிவித்துள்ளது.
ராக்கெட் தாக்குதலுக்கு பிறகு, லெபனான் மீது தாக்குதல் நடத்தியது, ஹிஸ்புல்லா தலைவரைகள் படுகொலை செய்தது, பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை வெடிக்க செய்தது ஆகியவற்றின் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இருப்பதாக ஹிஸ்புல்லா போராளி குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தெற்கு லெபனானின் நஃபாகியே பகுதியில் இருந்து மத்திய இஸ்ரேலிய பகுதியை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்டுகளை இடைமறித்து அழித்ததாக IDF தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஹிஸ்புல்லா அமைப்பும், இஸ்ரேலும் ஒரே ராக்கெட் ஏவுதலை குறிப்பிடுகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
முதல் முறையாக இஸ்ரேலிய பிராந்தியத்திற்குள் ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியதை அடுத்து டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலிய பகுதிகளில் அபாய சைரன்கள் ஒலிக்கப்பட்டுள்ளது.