Paristamil Navigation Paristamil advert login

பிரட் அல்வா

பிரட் அல்வா

25 புரட்டாசி 2024 புதன் 11:48 | பார்வைகள் : 312


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அல்வா என்று சொன்னாலே நாக்கில் எச்சில் ஊறும். அதிலும் கல்யாண வீட்டு பந்தியில் பரிமாறப்படும் பிரட் அல்வா என்றால் கேட்கவா வேண்டும். அதன் ருசியே அலாதியானது..ருசியான கல்யாண வீட்டு பிரட் அல்வாவை வீட்டிலேயே எளிதாக எப்படி அதே சுவையில் செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்…

தேவையான பொருட்கள் :

பால் பிரட் துண்டுகள் - 16

பால் - 1.5 கப்

சர்க்கரை - 1 கப்

முந்திரி - 10

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்

எண்ணெய் மற்றும் நெய் - தேவையான அளவு

தண்ணீர் - ½ கப்

செய்முறை :

முதலில் பிரட் துண்டுகளில் உள்ள ஓரத்தை நீக்கிவிட்டு அதை துண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கவும்.

இவை நன்கு சூடானதும் அடுப்பின் தீயை குறைத்து அதில் பிரட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் வறுத்த பிரட் துண்டுகளில் உள்ள எண்ணெய்களை சமையல் டிஸ்ஸுவை வைத்து முழுவதுமாக நீக்கவும்.

அதேபோல் அனைத்து பிரட் துண்டுகளையும் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.

பின்னர் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கவும்.

பின்னர் அதில் முழு முந்திரி பருப்பையும் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்பு அதே கடாயில் 1 கப் சர்க்கரை மற்றும் ½ கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும் வரை கலந்துவிட்டுக்கொள்ளவும்.

சர்க்கரை பாகு கொப்பளிக்கும் வரை குறைந்த வெப்பத்தில் சமைக்கவும். பிறகு அதில் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளவும்.

சர்க்கரை பாகு நன்கு ஒட்டும் பதத்திற்கு வந்தவுடன் வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை போட்டு கொள்ளவும்.

அவற்றை மெதுவாக சிறிய துண்டுகளாக உடைத்து, சர்க்கரை பாகு பிரட் துண்டுகளால் உறிஞ்சப்படும் வரை நன்றாக கலக்கவும்.

பின்னர் அதில் பால் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.

பிரட் துண்டுகள் சில மென்மையாகவும் சில மொறுமொறுப்பாகவும் மாறத் தொடங்கும் வரை குறைந்த தீயில் சமைக்கவும்.

பால் முழுமையாக உறிஞ்சப்பட்டு அல்வா நிலைக்கு வரும் வரை சுமார் 8-10 நிமிடங்களுக்கு இதை சமைக்கவும்.

அல்வாவில் இருந்து எண்ணெய் மற்றும் நெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

பின்னர் அதில் வறுத்த முந்திரி பருப்பை போட்டு நன்றாக கலந்தால் சுவையான பிரட் அல்வா சாப்பிட ரெடி.

இந்த பிரட் அல்வாவை சூடாகவோ அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ச்சியாகவோ ருசித்து மகிழுங்கள்…

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்