Paristamil Navigation Paristamil advert login

2-வது டெஸ்ட்  தொடக்கம்: வங்கதேசதுக்கு எதிராக 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்தியா

2-வது டெஸ்ட்  தொடக்கம்: வங்கதேசதுக்கு எதிராக 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்தியா

26 புரட்டாசி 2024 வியாழன் 10:06 | பார்வைகள் : 371


வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 

இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது . டிரா செய்தாலே தொடரை வென்றுவிடும்.

இந்திய அணி தொடர்ச்சியாக சொந்த மண்ணில் 17 டெஸ்ட் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது. வங்காளதேசத்துக்கு எதிராகவும் வெல்லும் போது தொடர்ந்து 18-வது டெஸ்ட் தொடராக அமையும்.

கான்பூர் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். இதனால் 3-வது சுழற்பந்து வீரராக அக்ஷர் படேல் அல்லது குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படுவார்கள். ஆகாஷ் தீப் நீக்கப்படுவார். மற்றபடி அணியில் மாற்றம் இருக்காது.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் ஆடிய ரிஷப் பண்ட் சேப்பாக்கத்தில் சதம் அடித்து சாதித்தார். இதே போல சுப்மன்கில்லும் செஞ்சூரி அடித்தார். தொடக்க வீரர் ஜெய்ஷ்வாலும் நல்ல நிலையில் உள்ளார்.

சென்னையை சேர்ந்த ஆர்.அஸ்வின் முதல் டெஸ்டில் சதம் அடித்ததோடு 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதேபோல ஜடேஜாவும் ஆல்ரவுண்டர் பணியில் சிறப்பாக செயல்பட்டார். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா அணியின் முதுகெலும்பாக உள்ளார். கேப்டன் ரோகித் சர்மா, வீராட் கோலியும் தங்களது பேட்டிங் திறனை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்க இந்த டெஸ்டில் வெல்ல வேண்டிய நெருக்கடி நஜூமுல் ஹூசைன் ஷான்டே தலைமையிலான வங்காளதேச அணிக்கு இருக்கிறது. பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 2 டெஸ்டிலும் வீழ்த்திய வரலாறு படைத்த வங்காள தேசத்தால் இந்தியாவில் சாதிக்க முடியவில்லை. அந்த அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க கடுமையாக போராடும்.

காயத்தில் இருக்கும் ஆல் ரவுண்டர் ஷகீப்-அல்-ஹசன் 2-வது டெஸ்டில் ஆடுவாரா? என்பது உறுதியில்லை. அந்த அணியில் முஷ்பிகுர் ரகீம், கேப்டன் ஹான்டோ, லிட்டன் தாஸ், மெகதிஹசன் மிராஸ், தஜிஜூல் இஸ்லாம் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் நாளை மோதுவது 15-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 14 போட்டியில் இந்தியா 12-ல் வெற்றி பெற்றது. 2 டெஸ்ட் டிரா ஆனது.

இரு அணிகள் இடையே நடந்த 8 டெஸ்ட் தொடரில் இந்தியா 7 தொடரை கைப்பற்றியுள்ளது. 2015-ம் ஆண்டு நடந்த ஒரே ஒரு டெஸ்ட் தொடர் டிரா ஆனது.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்