ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் ஜாம்பவான் டுவைன் பிராவோ - KKR அணியின் ஆலோசகர் நியமனம்!
27 புரட்டாசி 2024 வெள்ளி 10:11 | பார்வைகள் : 1004
உலகின் நட்சத்திர கிரிக்கெட் ஜாம்பவான் டுவைன் பிராவோ அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் டி20 கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான டுவைன் பிராவோ, நீண்ட கால கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2021-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிராவோ, ஐபிஎல் மற்றும் பிற டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த டுவைன் பிராவோ தன்னுடைய கடைசி போட்டியில் விளையாடிய பிறகு கண்ணீருடன் வெளியேறினார்.
இந்நிலையில் ஐபிஎல்-லின் நடப்பு சாம்பியனான KKR தங்கள் அணியின் புதிய தலைமை ஆலோசகராக டுவைன் பிராவோ-வை நியமித்து இருப்பதாக அறிவித்துள்ளது.
KKR அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்து வந்த நிலையில், அவர் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக KKR அணி தங்கள் அணிக்கான புதிய ஆலோசகராக டுவைன் பிராவோ-வை நியமித்துள்ளது.
டுவைன் பிராவோ கூறுகையில், நைட் ரைடர்ஸ் நிர்வாகத்தின் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருந்து வருகிறது. ஷாருக் கான் உள்ளிட்ட நிர்வாகத்தினர் உருவாக்கும் குடும்ப சூழல், நைட் ரைடர்ஸ் அணியை மற்ற அணிகளில் இருந்து தனித்து நிற்க வைக்கிறது. இனி வீரராக இல்லாவிட்டாலும், ஒரு பயிற்சியாளராக அடுத்த தலைமுறை வீரர்களுக்கு என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.'"
டுவைன் பிராவோ கடந்த 2 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வந்த நிலையில், அவர் தற்போது KKR அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருப்பது CSK ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.