மாநில அரசுகளை திருடியது பா.ஜ; குற்றம் சாட்டுகிறார் கெஜ்ரிவால்
28 புரட்டாசி 2024 சனி 03:47 | பார்வைகள் : 1009
அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஆகியவற்றை தவறாக பயன்படுத்தி 10 மாநில அரசுகளை பா.ஜ., திருடிவிட்டது என டில்லி முன்னாள் முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
டில்லியில் சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: மார்ச் 2016ம் ஆண்டு முதல் மார்ச் 2024ம் ஆண்டு வரை பிரதமர் மோடி 13 மாநில அரசுகளை கவிழ்க்க முயற்சி செய்தார். அதில் 10 மாநில அரசுகளை கவிழ்ப்பதில் அவர் வெற்றி பெற்றார்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பா.ஜ., தவறாக பயன்படுத்தி வருகிறது. அஜித் பவார், பிரதாப் சர்நாயக் மற்றும் ஹசன் முஹ்ரிப் போன்ற மஹாராஷ்டிர அரசியல்வாதிகள் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டனர்.
ஆனால் அவர்கள் பா.ஜ.,வில் சேர்ந்தபோது அல்லது அவர்களின் தாய் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வ ஆதரித்தபோது அவை கைவிடப்பட்டன. 5 நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதி, மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பா.ஜ.,வில் ஊழல்வாதிகளை இப்போது தங்கள் கட்சியில் சேர்ப்பதாக குற்றம் சாட்டினேன். ஆர்.எஸ்.எஸ்., தலைவர் இதை ஒப்புக்கொள்கிறாரா?
பா.ஜ.,வினர் கொஞ்சம் கூட வெட்கப்படுகிறார்களா? வேறு எந்த மாநிலத்திலும் ஆம் ஆத்மி அரசு கட்டியுள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை பா.ஜ.,வால் கட்ட முடியாது. என்னை அவதூறு செய்ய அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., மூலம் போலி வழக்குகளை பதிவு செய்தனர். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.