Paristamil Navigation Paristamil advert login

5ஜி, 6ஜி தொழில் நுட்பத்தை இந்தியா ஏற்றுமதி செய்யும் மத்திய அமைச்சர் சிந்தியா பேச்சு

5ஜி, 6ஜி தொழில் நுட்பத்தை இந்தியா ஏற்றுமதி செய்யும் மத்திய அமைச்சர் சிந்தியா பேச்சு

28 புரட்டாசி 2024 சனி 04:04 | பார்வைகள் : 199


சென்னை ஐ.ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட, '5ஜி டெஸ்ட்பெட் புராஜக்ட்'டை, பார்வையிட்ட பின், மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது:

சென்னை ஐ.ஐ.டி.,க்கு அறிவியல், தொழில்நுட்பம், பாரம்பரியம், புதுமை உள்ளிட்டவை சார்ந்து நீண்ட வரலாறு உள்ளது. இன்னும் 22 மாதங்களில், உலகின் எந்த மூலையில் உள்ள மனிதனுடனும், தொழில் நுட்பத்தால் தொடர்பு கொள்ளும் வகையில், நாம் நெட் ஒர்க்கை கட்டமைத்து வருகிறோம்.

உலகில், '4ஜி, 5ஜி' தொழில்நுட்பங்கள் வந்த போது, உலகத்துடன் சேர்ந்தே பயணித்தோம். இனி, '6ஜி' தொழில்நுட்பத்தில் உலகையே இந்தியா வழிநடத்தும்.

அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன், 25 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்தினர்; தற்போது, 97 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்; 6 கோடி பேர் பிராட் பேண்ட் பயன்படுத்திய நிலையில், தற்போது 94 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.

மிகப்பெரிய நாட்டில், கம்பி வழித்தடத்தில் தொலைதொடர்பு வழங்குவதில் சிரமம் இருந்தது. தற்போது, நாடே தொலை தொடர்பால் முழுமை பெற்றுள்ளது. அதற்கு காரணம், இளம் அறிஞர்கள் தான். நாம் மக்கள் தொகையில் மட்டுமல்ல; அறிவாலும், உலகின் ஐந்தாவது பொருளாதார இடத்திலிருந்து, 2030க்குள் மூன்றாவது இடத்துக்கு முன்னேறுவோம்.

நாம், 3ஜி, 4ஜி தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்த நிலையில், 5ஜி, 6ஜி தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்வோம். தற்போது, பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அமைந்த, 4ஜியை பயன்படுத்த துவங்கி விட்டோம்.

இது மட்டுமல்ல; 737 போயிங் விமானம், பல்வேறு போர் கப்பல்கள், அபாச்சி ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றுக்கான தொலை தொடர்பிலும், நாம் உள்நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறோம்.

தற்போது, மொபைல் போன்கள் வாயிலாக, சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதை தடுப்பதற்கான தீர்வுகளையும், நம் தொலைதொடர்பு துறை சார்ந்த பாதுகாப்பையும், சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்கும் உங்களை போன்ற இளைஞர்கள் தான் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, 5ஜி டெஸ்பேன்ட் ஒருங்கிணைப்பாளரும், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பேராசிரியருமான பாஸ்கர் ராமமூர்த்தி, துறை தலைவர் நாகேந்திர கிருஹ்னபுரா மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்