Paristamil Navigation Paristamil advert login

பாலம் கட்டிய கதை ( நேற்றைய தொடர்ச்சி )

பாலம் கட்டிய கதை ( நேற்றைய தொடர்ச்சி )

15 ஆனி 2020 திங்கள் 10:30 | பார்வைகள் : 19371


பாலம் கட்ட வந்தவர் கொண்டுவந்த வரைபடத்தையும், திட்டத்தையும் பார்த்தபோது அரசுக்கு கொஞ்சம் தூக்கிவாரிப் போட்டது. கம்பிகளையும் இரும்புத் தூண்களையும் சேர்த்து அவ்வளவு உயரத்தில் பாலம் கட்ட வேண்டும்.  திட்டம் நிறைவேறினால், உலகத்தில் அதுதான் உயரமான பாலமாக இருக்கும். 
 
இருப்பினும் திட்டம் தெளிவாக இருந்ததால் அரசு ஒப்புதல் கொடுத்தது. பாலம் கட்ட வந்தவர், தனது சக பொறியியலாளர்கள், உதவியாளர்கள், வேலையாட்கள் எல்லோரையும் திரட்டிக்கொண்டு காரியத்தில் குதித்தார். 
 
1882 தொடக்கம் 1884 வரையான இரண்டு ஆண்டுகளில் பாலம் கட்டுவது என்று தீர்மானித்தார்கள். 3,100,000 பிராங்குகள் செலவிட்டு, 3,587 தொன் இரும்பை பயன்படுத்தி வேலை அமர்களமாக நடந்தது. 
 
பெரும் இரும்புத் தூண்களை ஆற்றுக்குள் இறக்கி, நாட்டி, ஒன்றன்மேல் ஒன்றை வைத்து பூட்டி மளமளவென்று உயர்த்திக் கட்டினார்கள். 
 
சொன்னபடி இரண்டு ஆண்டுகளில் பாலம் தயாராகிவிட்டது. மேலே உச்சியில் தண்டவாளம் எல்லாம் போட்டு ரயில் போக தயாராகிவிட்டது. 
 
அரசு பாலத்தை திறந்து வைத்தது. ரயிலை சேவைக்கு விட்டது. தொடக்கத்தில் பயணிகள் கொஞ்சம் கை கால்கள் உதற உதறத்தான் பயணம் செய்தார்கள். இதற்கு முன்னர் இந்தளவு உயரத்தில் எங்குமே பாலம் இருந்ததில்லை. அதுதான் பயணிகளின் பயத்துக்கு காரணம். 
 
பாலம் கட்டும் முயற்சி வெற்றியடைந்ததும் அதனைக் கட்டிய நமது ‘மாணிக்கம்’ போலிருந்த பொறியியலாளரின் புகழ் எங்கும் பரவியது. புதுப் புது கட்டுமானங்களுக்கான ஒப்பந்தங்கள் அவருக்கு வந்தன. 
 
அவர் மீண்டும் களத்தில் இறங்கினார். கட்டிமுடித்தார். அடுத்துவரும் மூன்று ஆண்டுகளில் அவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை ஒன்று வரப்போகிறது என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. 
 
1887 ம் ஆண்டில் ஒரு நாள். அதிர்ஷ்டதேவதை அவரது வாசல் கதவைத் தட்டியது. அரசாங்கத்திடம் இருந்து ஒரு அழைப்பு. 
 
‘1889 இல் நடக்க இருக்கும் ‘உலக வர்த்தக கண்காட்சிக்கு வருவோரை வரவேற்க ஒரு கோபுரம் கட்டவேண்டும். உங்களிடம் ஏதும் ஐடியா இருக்கா?’ 
 
யாரைப் பார்த்து என்ன கேள்வி? இவர்தான் ஐடியா மணி ஆச்சே. திட்டத்தோடு வருகிறேன் என்று அரசுக்குப் பதில் அனுப்பினார். 
 
ஆனால் அரசு ஒரு நிபந்தனை போட்டது. ‘கோபுரத்தை தலைநகர் பரிசில் தான் கட்ட வேண்டும். இந்த 550 மீட்டர் நீளத்தில் எல்லாம் கட்ட முடியாது. ஆனால் உயரம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்’. 
 
நம்மாள் திட்டத்தைப் போட்டார். அதை அரசிடம் காட்டினார். அரசு  வேர்த்து விறுவிறுத்தது. தரையில் இருந்து எந்தப் பிடிமானமும் இல்லாமல் மெல்லியதாய் ஒரு ஒற்றைக் கோபுரம். அதுவும் 300 மீட்டர் உயரத்தில்....!! 
 
இது விபரீத விளையாட்டு. வினையாக வாய்ப்பு உண்டு என்றெல்லாம் பலர் தடுத்தார்கள். 
 
நமது பொறியியலாளர் Gustave Eiffel நம்பிக்கையைக் கைவிடவில்லை. அரசிடம் அழுத்தமாகச் சொன்னர். ஈபிள் கோபுரத்தைக் கட்டி முடித்தார். 
 
அதுவரை உலகில் மிக உயரமான பாலத்தைக் கட்டியவர் என்ற பெருமையோடு இருந்த, Gustave Eiffel அவர்கள், இப்போது உலக அதிசயம் ஒன்றைக் கட்டினார் என்ற பெருமையோடு  வரலாற்றில் வாழ்கின்றார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்