ஒரே நாடு ஒரே தேர்தல் கனவு மட்டும் பலிக்காது; தி.மு.க., பவள விழாவில் முதல்வர் பேச்சு
29 புரட்டாசி 2024 ஞாயிறு 03:01 | பார்வைகள் : 1329
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லாத ஒன்று என தி.மு.க., பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தி.மு.க., குறித்து கட்சியின் மூத்த தலைவர்களும், கூட்டணி கட்சியினரும் மேடையில் பேசி முடித்த பிறகு, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பேசினார்.
அவர் பேசியதாவது: தி.மு.க.,வின் அடிப்படை கொள்கைகள் சமூகத்தின் அடிப்படை கொள்கைகளாக உள்ளன. தி.மு.க., கூட்டணியில் ஒரே கொள்கை கொண்ட தோழமை இயக்கங்களாக செயல்பட்டு வருகிறோம். நமது கூட்டணியின் ஒற்றுமையை பார்த்து எதிரிகளுக்கு பொறாமை வந்து விட்டது. நமது கொள்கை கூட்டணியில் எப்போது பிளவு வரும் என எதிர்பார்க்கின்றனர். அவர்களின் கனவு பலிக்காது.
லோக்சபா தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள், ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி பேசுகின்றனர். அன்று நடந்த தேர்தலும், இன்று நடக்கும் தேர்தலும் ஒன்றா? அன்றைய வாக்காளர் எண்ணிக்கை எத்தனை? இன்றைய வாக்காளர் எண்ணிக்கை எத்தனை? ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது.
மக்களாட்சிக்கு எதிராக மத்திய பா.ஜ., அரசு செயல்படுகிறது. மாநில சுயாட்சியை வென்றெடுக்க உறுதியேற்போம், எனக் கூறினார்.