நேபாளத்தில் கொட்டித் தீர்த்த கனமழை - 100க்கும் மேற்பட்டோர் பலி
29 புரட்டாசி 2024 ஞாயிறு 13:29 | பார்வைகள் : 2516
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.
சனிக்கிழமை, நேபாளம் 54 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழைப்பொழிவை எதிர்கொண்டுள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 323 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குறைந்தது 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 100 க்கும் மேற்பட்டோர் படுமடைந்து இருப்பதுடன் 68 பேர் வரை காணாமல் போய் உள்ளனர்.
200க்கும் மேற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் தற்போது வரை புகார் அளிக்கபட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆசியாவில் மழைக்காலத்தில் மழை தொடர்பான பேரழிவுகள் பொதுவானவை. இருப்பினும், இத்தகைய பேரழிவுகளின் தீவிரம் மற்றும் அதிர்வெண் காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ 3,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள் ஹெலிகாப்டர்கள் மற்றும் மோட்டார் படகுகளுடன் நிறுத்தப்பட்டனர்.
தேசிய பேரிடர் குறைப்பு மேலாண்மை ஆணையத்தின் (NDRRMA) கூற்றுப்படி, மழைக்காலம் தொடர்பான பேரழிவுகளால் 412,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படலாம் என எச்சரித்துள்ளது.