வினாத்தாள் முறைகேடு - இலங்கை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள முக்கிய தீர்மானம்!
30 புரட்டாசி 2024 திங்கள் 04:27 | பார்வைகள் : 2085
அண்மையில் நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையினை மீண்டும் நடத்தாதிருக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பகுதி 1 வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்தமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இந்த பரிந்துரையினை முன்வைத்துள்ளது.
கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும், கசிந்ததாகக் கருதப்படும் கேள்விகளுக்கான புள்ளிகளை முழுமையாக வழங்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் அமித் ஜயசுந்தர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவது மாணவர்களின் மனநிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் குறித்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், மீண்டும் பரீட்சை நடாத்தப்படுவதன் மூலம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் அந்தக் குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியின் சில கேள்விகளை ஒத்த வினாத்தாள் சமூக ஊடகங்கள் ஊடாக பகிரப்பட்டதாகப் பெற்றோர்களினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.