தீவிரமடையும் போர்... - மத்தியதரைக்கடல் நோக்கி இராணுவக் கப்பலை நகர்த்தும் பிரான்ஸ்!
1 ஐப்பசி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 3163
லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை மேற்கொண்டுவரும் நிலையில், பிரான்ஸ் தனது இராணுவக் கப்பலை மத்திய தரைக்கடலின் தென் கிழக்கு பகுதி நோக்கி நகர்த்தியுள்ளது.
நேற்று செப்டம்பர் 30, பிரான்சின் இராணுவ ஜெனரல் இதனை தெரிவித்தார். உலங்குவானூர்திகள் தாக்கிய கப்பல் ஒன்றை Toulon துறைமுகத்தில் இருந்து மத்திய தரைக்கடல் நோக்கி அனுப்பியுள்ளது. 5-6 நாட்களில் கப்பல் குறிக்கப்பட்ட இடத்தினைச் சென்றடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
”நிலமைகள் மோசமடைவதை தடுப்பதற்கு நாங்கள் எங்களிடம் உள்ள வளங்களை பயன்படுத்துகின்றோம்!” என அவர் குறிப்பிட்டார்.
21,500 தொன் எடைகொண்ட 199 மீற்றர் நீளம் கொண்ட இராட்சத கப்பல் ஒன்றே, மருத்துவமனை வசதிகளுடன் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரெஞ்சு-லெபனான் குடியுரிமை கொண்ட 23,000 பேர் லெபனானில் வசிக்கின்றனர். அவர்கள் எந்நேரமும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகத்தை (Quai d'Orsay) தொடர்புகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சைப்ரஸ் எல்லையில் பிரித்தானியா தனது 700 வீரர்கள் கொண்ட இராணுவப்படையை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.