Paristamil Navigation Paristamil advert login

கடலில் உலகை சுற்றும் பெண் அதிகாரிகள்

கடலில் உலகை சுற்றும் பெண் அதிகாரிகள்

3 ஐப்பசி 2024 வியாழன் 01:23 | பார்வைகள் : 1350


நம் கடற்படையைச் சேர்ந்த இரண்டு பெண் அதிகாரிகள், எட்டு மாதங்களில் 40,000 கி.மீ., தொலைவுக்கு கடலில் உலகை சுற்றி வரும் சாகச பயணத்தை நேற்று துவக்கினர்.

சாகர் பரிக்கிரமா - 2 என்ற திட்டத்தின் கீழ், இந்திய கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர்கள் ரூபா, தில்னா ஆகியோர் உலகை சுற்றி வர உள்ளனர். இதற்கு முன், 2017-ல் சாகர் பரிக்கிரமா - -1 திட்டத்தின் கீழ் நம் கடற்படையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் குழு, உலகை கப்பலில் சுற்றி வந்தனர்.

தற்போது, இந்த பயணத்தை இரண்டு பெண் அதிகாரிகள் மட்டும் தனியாக மேற்கொண்டு உள்ளனர்.

இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ்.வி., தாரிணியில் இருவரும் தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் ரூபா, புதுச்சேரியைச் சேர்ந்தவர். தில்னா, கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்.

குளிர், கடல் சீற்றம் உள்ளிட்ட பல்வேறு இடர்ப்பாடுகளுடன் இவர்களது கடல் பயணம் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு மாதங்களுக்குப் பின், இவர்கள் இருவரும் தாயகம் திரும்பும் வகையில் பயண திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருவரின் சாகச பயணத்தை, கோவாவில் உள்ள கடற்படை தளமான ஐ.என்.எஸ்., மண்டோவியில், கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உலகை சுற்றும் பயணத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக ரூபா, தில்னா ஆகிய இருவரும் 70,376 கி.மீ., வரை கடலில் பயணித்து, கடினமான பயிற்சிகளை மேற்கொண்டனர்.

தற்போது, அடுத்த எட்டு மாதங்களில் 40,000 கி.மீ., கடக்க இருவரும் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

லெப்டினன்ட் கமாண்டர் தில்னா 2014-ம் ஆண்டு கடற்படையில் இணைந்தார். இவரது தந்தை தேவதாசன், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். இதேபோல், புதுச்சேரியைச் சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர் ரூபா 2017-ம் ஆண்டு கடற்படையில் இணைந்தார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்