ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்கள்; அறிமுகம் செய்கிறது ரயில்வே
4 ஐப்பசி 2024 வெள்ளி 08:05 | பார்வைகள் : 1265
நாட்டில் முதல் ஹைட்ரஜன் ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. முதல் ரயிலின் சோதனை இந்தாண்டு இறுதிக்குள் துவங்க உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.2800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தில் கொண்டு, வரும் 2030ம் ஆண்டுக்குள் ஜீரோ கார்பன் உமிழ்வு இலக்கை அடைய இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை அறிமுகம் செய்ய உள்ளது. முதல் ரயிலின் சோதனை இந்தாண்டு இறுதிக்குள் துவங்க உள்ளது. டில்லி, ஜிந்த்- சோனிபட் இடையேயான வழித்தடத்தில் 89 கி.மீ., தூரம் வரை இயக்கப்படும்.
இது குறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் வடக்கு ரயில்வேயின் டில்லி கோட்டத்தில் இயக்கப்படும். இந்த ரயிலின் சோதனை ஓட்டம் டிசம்பர் மாதம் துவங்கும். இந்த திட்டம் ரயில்வேயின் மிகப்பெரிய திட்டம் ஆகும் என்றார்.
திட்டம் பெயர் என்ன?
பாரம்பரிய மற்றும் மலைப்பகுதிகளில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு 'ஹைட்ரோஜன் பார் ஹெரிடேஜ்' ( Hydrogen for Heritage) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் கொண்ட ரயில்கள் சுற்றுச்சூழலுக்கு நன்மை தரக்கூடியவை. அவை மாசுபாட்டை ஏற்படுத்துவதில்லை. மின்சாரத்தை சேமிக்கும் HOG தொழில்நுட்பம் மற்றும் ரயில்களில் LED விளக்குகள் ஆகியவை இதில் அடங்கும். இது தவிர ரயில் நிலையங்கள் சோலார் ஆலைகளை நிறுவி வருகிறது.
2800 கோடி ஒதுக்கீடு
ஹைட்ரஜன் ரயில் திட்டத்திற்காக ரயில்வே அதிக பணம் செலவழித்து வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 35 ஹைட்ரஜன் ரயில்களுக்கு ரூ.2800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பாரம்பரிய வழித்தடங்களில் ஹைட்ரஜன் தொடர்பான உள்கட்டமைப்புக்காக தனியாக ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, ஹைட்ரஜன் ரயில் திட்டம் இந்திய ரயில்வேக்கு ஒரு லட்சியமாக உள்ளது.