கருப்பை புற்றுநோய்க்கான முதல் தடுப்பூசி - பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள்
4 ஐப்பசி 2024 வெள்ளி 09:19 | பார்வைகள் : 2310
பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கருப்பை புற்றுநோயை அழிக்க கூடிய ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்கி வருகின்றனர்.
ஒவரியன்வாக்ஸ்(OvarianVax) என்று அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, நோயின் ஆரம்ப கட்டங்களை அடையாளம் கண்டு தாக்கும்படி நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு கற்றுக் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பப்பை வாய் (cervical) புற்றுநோயைக் குறைக்க பெரிதும் உதவியுள்ள HPV தடுப்பூசியைப் போலவே, ஒவரியன்வாக்ஸையும் NHS இல் தடுப்பு மருந்தாக வழங்க முடியும் என கூறுகின்றனர்.
இது உலகளவில் மில்லியன் கணக்கான பெண்களை பாதிக்கும் கருப்பை புற்றுநோயை எதிர்த்து போராடுவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும்.
கருப்பை புற்றுநோய் செல் ஆய்வகத்தில் உள்ள பேராசிரியர் Ahmed மற்றும் அவரது குழு, நோயெதிர்ப்பு மண்டலம் அடையாளம் காணக்கூடிய ஆரம்ப கட்ட கருப்பை புற்றுநோய் செல்களின் மேற்பரப்பில் உள்ள குறிப்பிட்ட புரதங்களை அடையாளம் காண முயற்சி செய்கின்றனர்.
இந்த செல்லுலார்(cellular) இலக்குகளை புரிந்து கொள்வதன் மூலம், ஆய்வாளர்கள் ஆய்வகத்தில் புற்றுநோய் செல்களை கொல்லக்கூடிய மிகவும் திறமையான தடுப்பூசியை உருவாக்க முடியும் என்று நம்புகின்றனர்.
மேலும் இந்த ஆய்வுக்கு பிரித்தானிய புற்றுநோய் ஆராய்ச்சியகம் நிதி அளித்து வருகிறது, இதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் £600,000 வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் BRCA மரபணு மாற்றங்களைக் கொண்ட நபர்கள் மற்றும் ஆரோக்கியமான பெண்கள் உள்ளிட்ட மனித மருத்துவ சோதனைகளில் தடுப்பூசி சோதிக்கப்படலாம்.