கொழும்பு துறைமுக வளாகத்தில் துறைமுகத்தில் கடற்படை புதைகுழியா?
5 ஐப்பசி 2024 சனி 11:23 | பார்வைகள் : 1477
இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழிருந்த கொழும்பு துறைமுக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வுப் பணிகளின் போது ஐந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 13 அன்று தனியார் நிறுவனமொன்றால்; போர்ட் சிட்டி அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கொழும்பு கோட்டையில் உள்ள பழைய செயலகக் கட்டிடத்திற்கு அருகில் நிலத்தடியில் குழி தோண்டப்பட்ட போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கொழும்பு துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மீதான விசாரணை கொழும்பு பிரதான நீதவான் தலைமையில் செப்டெம்பர் 5 ஆம் திகதி அகழ்வு நடவடிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
சட்ட வைத்திய அதிகாரிகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காணாமல் போன நபர்கள் தொடர்பான அலுவலகத்தின் பிரதிநிதிகள் சகிதம் அகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முதற்கட்ட அகழ்வாராய்ச்சியின் பின்னர் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 26, 27, 28 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டது.அடையாளம் காணப்பட்ட இடத்தில் மேலும் பல எலும்புக்கூடுகள் வெளிப்பட்டிருப்பதால், அடுத்த கட்ட அகழ்வாராய்ச்சி அவசியம் என கருதப்படுகின்றது.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இம்மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கை கடற்படை வசமே துறைமுகப்பகுதியிருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.