சினிமாவில் இருந்து விலகிறாரா ரஜினிகாந்த்?
5 ஐப்பசி 2024 சனி 11:52 | பார்வைகள் : 1072
கோலிவுட் திரையுலக ரசிகர்களால், தலைவா என கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவை தாண்டி, தென்னிந்திய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். அதே போல் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து புகழின் உச்சத்தை எட்டியவர். இவருடைய ஸ்டைலுக்கு, ஏகப்பட்ட பிரபலங்கள் கூட ரசிகர்கள் தான். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்புக்கு சொந்தக்காரரான ரஜினிகாந்த் 73 வயதிலும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம், 650 கோடி வசூல் சாதனை செய்தது. ஏஜ் இஸ் ஜஸ்ட் நம்பர் என்பதை நிரூபிக்கும் விதமாக, இந்த வயதிலும் ஆட்டம், பாட்டம், ஆக்ஷன் என நடிப்பில் அசத்தி வரும் ரஜினிகாந்த், செப்டம்பர் 30-ஆம் தேதி இரவு திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வெளியான தகவலில், நடிகர் ரஜினிகாந்துக்கு லேசான நெஞ்சு வலி, சோர்வு மற்றும் வயிற்று வலி காரணமாகவே சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு இதய நோய் நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர். இதயத்திலிருந்து உடலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் (aorta) வீக்கம் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை தேவையில்லாமல் டிரான்ஸ் கேத்தடர் முறையில் சிகிச்சை அளித்து அந்த வீக்கத்தை குணப்படுத்தினர். அதே போல் சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வயிற்றுவலியால் அவதி பட்ட ரஜினிகாந்துக்கு, அடிவயிற்றில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.
ரஜினிகாந்துக்கு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவது இது முதல் முறை அல்ல, ஏற்கனவே சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இவருக்கு நடந்துள்ளது. வருடத்திற்கு ஒரு முறையாவது, அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் ஒவ்வொரு நாளும் சாப்பிடும் உணவு கூட மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி தான் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதே போல் கடந்த மூன்று வருடங்களுக்கு முன், கொரோனா அறிகுறிகளுடன்.. ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அப்போது ரஜினிகாந்த் உடல்நலனை கருத்தில் கொண்டு சினிமாவில் இருந்து விலக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுதியதாக கூறப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் சினிமாவுக்கு முழுக்கு போடாமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
அதே நேரம் அரசியலுக்கு வர உள்ளதாக ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட குறிக்கப்பட்ட நாளில், உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அரசியலுக்கு வர போவது இல்லை என அறிவித்தார். ரஜினிகாந்தின் இந்த முடிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ரஜினிகாந்தின் இந்த முடிவு... பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானது.
உடல்நிலையில், அடுத்தடுத்து சில பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் சூப்பர் ஸ்டார், இனி சினிமாக்களில் நடிப்பதை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு காரணமாக அவர் மன அழுத்தத்திற்கு ஆளாவது நல்லதல்ல என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளார்களாம். அதனால் ரஜினிகாந்த் சினிமாவுக்கும் கும்பிடு போட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தாலும், இதுவரை ரஜினிகாந்த் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இதுகுறித்து வெளியாகவில்லை.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ரஜினியாகாந்தின் 170-ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படத்தில், ரஜினிகாந்த் என்கவுண்டர்க்கு எதிரான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'கூலி' படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. கூலி படத்தில் கிங் நாகர்ஜுனா முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. கூலி படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்ற பேச்சு அடிபட்டு வந்தாலும், இந்த தகவல் வதந்தியாக மாறவே வாய்ப்புகள் அதிகம். எனவே ரஜினிகாந்தின் முடிவை தெரிந்து கொள்ள கார்த்திருப்போம்.