ஹரியானா, காஷ்மீரில் காங்., ஆட்சி?
6 ஐப்பசி 2024 ஞாயிறு 04:04 | பார்வைகள் : 1348
ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில், செப்., 18, 25 மற்றும் அக்., 1ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது.
ஹரியானாவுக்கு ஒரே கட்டமாக நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 61 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
கூட்டணி முறிவு
இதையடுத்து, பல்வேறு தனியார், 'டிவி' சேனல்கள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை நேற்று மாலை வெளியிட்டன. இவற்றில், ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என, பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்றும், பா.ஜ., அதற்கு பலத்த போட்டியாக இருக்கும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.
இதனால், ஜம்மு - காஷ்மீரில் தொங்கு சட்ட சபை அமைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சில கணிப்புகள் தெரிவித்துள்ளன.
முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் பி.டி.பி., எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்து, காஷ்மீரில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரியும்.
ஜம்மு - காஷ்மீரில் கடைசியாக, 2014ல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது மாநிலமாக அது இருந்தது. தேர்தலுக்குப் பின், பா.ஜ., மற்றும் பி.டி.பி., கூட்டணி ஆட்சியை அமைத்தன. கடந்த 2018ல் கூட்டணி முறிந்ததால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமலானது.
இதற்கிடையே, 2019ல் சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு - காஷ்மீர் சட்டசபையுடன் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ.,வுக்கு எதிராக, 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி அமைக்கப்பட்டது.
இந்த கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த தேசிய மாநாட்டு கட்சி, பி.டி.பி., ஆகியவையும் இணைந்தன. கூட்டணி அமைத்தே லோக்சபா தேர்தலையும் இந்த மூன்று கட்சிகளும் சந்தித்தன.