Paristamil Navigation Paristamil advert login

அரசின் கவனக்குறைவு தான் காரணம்; வி.சி.க., அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

அரசின் கவனக்குறைவு தான் காரணம்; வி.சி.க., அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

7 ஐப்பசி 2024 திங்கள் 13:12 | பார்வைகள் : 1288


அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது' என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் வான்படை சாகச கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது.

கொளுத்தும் வெயிலில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன்காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும். சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும். இது அறிவியல் எதார்த்தம். இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும். கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவில்லை.


பற்றாக்குறை
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அகற்ற போதிய இடவசதியை ஒருங்கு படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதையும் காண முடிகிறது.

அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் முடியாத நிலையில் போக்குவரத்து நெருக்கடியும் இருந்துள்ளது.

இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலேயே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது. அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர்.


வேதனை நிகழ்வு
தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முடுக்கிவிடவில்லை என்பதை மக்களின் குமுறலில் இருந்தே அறிய முடிகிறது. எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும். அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ரூ.25 லட்சம்
'சென்னையில் சாகச நிகழ்வில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தன் கடமையில் இருந்து தவறிவிட்ட தமிழக அரசே உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.


சோகம்!

'வானில் சாகசம், தரையில் சோகம்' என சென்னை மெரினாவில் நடந்த, வான் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்