Paristamil Navigation Paristamil advert login

மெரினா கூட்ட நெரிசலில் 5 பேர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மெரினா கூட்ட நெரிசலில் 5 பேர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

7 ஐப்பசி 2024 திங்கள் 13:18 | பார்வைகள் : 2036


மெரினா விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில், வெயில் தாங்க முடியாமல் 5 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனக்கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று சென்னையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு தேவையான ஒத்துழைப்பையும், வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது. இதற்காக தமிழக போலீசார், தீயணைப்பு துறை, சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்தது. அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட மிக,மிக அதிகளவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும் போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், போக்குவரத்தை பெறுவதிலும் சிரமம் அடைந்தனர். அடுத்த முறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது கூடுதல் கவனத்துடன் ஏற்பாடுகள் செய்யப்படும்.

இந்நிகழ்வில் கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் விலைமதிப்பற்ற 5 உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதை அறிந்து வேதனையும், வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டு உள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்