என் பெயரை சொல்லித்தான் அவர் ஜெயித்தார்: தொடர்கிறது வினேஷ் - பிரிஜ் பூஷன் மோதல்
9 ஐப்பசி 2024 புதன் 03:21 | பார்வைகள் : 790
ஹரியானா சட்டசபை தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிக்கு எனது பெயரின் செல்வாக்கு தான் உதவியது என முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்தார்.
முன்னாள் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார். அவர் 65,080 வாக்குகளை பெற்றார். பா.ஜ., வேட்பாளர் யோகேஷ் குமாரை விட 6,105 அதிக ஓட்டுக்களை பெற்று வினேஷ் வெற்றி பெற்றார். வினேஷ் போகத்தின் வெற்றி குறித்து முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் மல்யுத்த வீராங்கனை பிரிஜ் பூஷன் சிங் வெற்றிக்கு எனது பெயரின் செல்வாக்கு தான் உதவியது.
அழிவு நிச்சயம்
என் பெயரை பயன்படுத்தி தான் அவர் வெற்றி பெற்றார். வினேஷ் போகத் எங்கு சென்றாலும், அழிவு அவரை பின்தொடர்கிறது. தேர்தலில் அவருக்கு வெற்றி, காங்கிரசுக்கு அழிவு. இந்த மல்யுத்த வீரர்கள் நாயகர்கள் அல்ல வில்லன்கள். நாட்டு மக்கள் காங்கிரசை தேர்தலில் புறக்கணித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் தேர்தல் களம் முற்றிலும் வேறானது. அங்கு மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பிரிஜ் பூஷன் சிங் மீது மல்லயுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினர். இந்த விவகாரத்தில் நீதி கேட்டு மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் டில்லியில் வீதியில் இறங்கி போராடினர். இதன் பிறகு தான், பிரிஜ் பூஷன் சிங் மீது டில்லி போலீசார் பாலியல் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.