சாம்சங் ஆலை வேறு மாநிலத்திற்கு இடம்பெயர்கிறதா? அமைச்சர் சொன்ன பதில்
9 ஐப்பசி 2024 புதன் 13:29 | பார்வைகள் : 874
சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் ஆலை வேறு மாநிலத்திற்கு செல்வதாக வெளியான தகவலை அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் அதை ஏற்காமல் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் சென்னையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த விவகாரம் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தொழிலாளர்களின் நலன்கள், படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு தொடக்கத்தில் இருந்து இந்த பிரச்னையை அணுகி வருகிறது. தொழிலாளர்கள் போராட்டம் குறித்து பேச்சு வார்த்தையின் போது முன் எடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகளை சாம்சங் நிறுவனத்தினர் ஏற்று கொண்டுள்ளனர். அதற்கான ஒப்பந்தத்தையும் சாம்சங் நிறுவனத்தினர் மேற்கொண்டு இருக்கின்றனர்.
குறிப்பாக சிறப்பு ஊக்கத்தொகையாக ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.5000 தரப்படும். தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியத்துடன் இந்த ஊக்கத்தொகை மாதம்தோறும் வழங்கப்படும். பணிக்காலத்தில் தொழிலாளர் உயிரிழந்து விட்டால் சிறப்பு நிவாரணமாக உடனடியாக 1 லட்சம் ரூபாய் தரப்படும். இதுபோன்ற பல கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் நிறைவேற்றி ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருக்கும் சி.ஐ.டி.யூ., அமைப்பினர் தங்களின் பதிவு குறித்து போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நடந்து வரும் நிலையில் இது குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வழக்கின் முடிவின் அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை நிச்சயமாக அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும்.
இதுபற்றிய விவரம் சி.ஐ.டி.யூ., அமைப்புக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த போராட்டத்தை சி.ஐ.டி.யூ., அமைப்பு கைவிடவேண்டும் என்று அரசின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
சாம்சங் தொழிலாளர்களை வீடு புகுந்து போலீசார் கைது செய்யவில்லை. வேனில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியிருக்கின்றனர். அப்போது அங்கு சென்ற போலீசார் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் போது சிலர் போலீசாருடன் மோதல் போக்கை கடைபிடித்தனர்.
எனவே அவர்களை கைது செய்யவே போலீசார் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்றிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
யாரையும் கைது செய்யும் எண்ணமும், நோக்கமும் அரசுக்கு இல்லை. அவர்களின் உணர்வுகளை மதிக்கக்கூடியது இந்த அரசாங்கம். யாரையும் ஒருபோதும் வீடு புகுந்து இந்த அரசு கைது செய்யாது. சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கத்தை பதிவு செய்வதில் தொழிலாளர் நலத்துறைக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், தொழிற்சாலையின் எதிர்ப்பால் தொழிற்சங்க பிரச்னை கோர்ட்டில் உள்ளது.
சாம்சங் தொழிற்சாலை வேறு மாநிலத்திற்கு செல்லவில்லை. தொழில் நடத்த தொடங்குவதற்கான உகந்த சூழ்நிலை உள்ள மாநிலம் தமிழ்நாடு. இந்த பிரச்னையை நாங்கள் அரசியலாக பார்க்கவில்லை. சி.ஐ.டி.யூ., அமைப்புக்கும் அரசுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஏற்கனவே கூறியபடி கோர்ட் என்ன சொல்கிறதோ அதை அரசாங்கம் நிறைவேற்றும்.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.