அரசு டாக்டர்கள் 200 பேர் கூண்டோடு ராஜினாமா; திணறும் மேற்கு வங்க அரசு
10 ஐப்பசி 2024 வியாழன் 08:18 | பார்வைகள் : 1045
மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் ஒரே சமயத்தில் வேலையை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.ஜி., கர் மருத்துவமனையில் இளம்பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மீதான எதிர்ப்பு அலை மேற்கு வங்கத்தில் இன்னும் தீரவில்லை. இந்த சம்பவத்தைக் கண்டித்து டாக்டர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மத்திய கோல்கட்டாவின் ஜன்பசாரில், கடந்த 5ம் தேதி மாலை முதல் ஜூனியர் டாக்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால், டாக்டர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜூனியர் டாக்டர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் விதமாக, மேற்கு வங்கத்தில் அரசு டாக்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
கோல்கட்டா தேசிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 50 சீனியர் டாக்டர்களும், என்.ஆர்.எஸ்., மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 34 டாக்டர்களும், சாகோர் தட்டா மருத்துவ கல்லூரியில் 30 டாக்டர்களும், ஜல்பாய்குரி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் 19 டாக்டர்களும் ராஜினாமா செய்தனர். அதற்கு முன்னதாக கோல்கட்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 70 சீனியர் டாக்டர்களும், வடக்கு வங்காள மருத்துவ கல்லூரி, மருத்துவமனையைச் சேர்ந்த 40 டாக்டர்களும் பணியை ராஜினாமா செய்தனர்.
டாக்டர்களின் ஒட்டுமொத்த ராஜினாமாவால், அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இது ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.