உக்ரைனின் குர்ஸ்க் பகுதியில் குவிக்கப்படும் 50,000 ரஷ்ய படைகள்
11 ஐப்பசி 2024 வெள்ளி 15:53 | பார்வைகள் : 1942
ரஷ்யா குர்ஸ்க் பகுதிக்கு கிட்டத்தட்ட 50,000 துருப்புகளை அனுப்பி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான எந்தவொரு அறிகுறிகளும் இதுவரை இரு தரப்புகளில் இருந்து வெளிவரவில்லை.
இந்த இரு நாடுகளுக்கு இடையிலான போரில் கிட்டத்தட்ட லட்சக்கணக்கானோர் உயிரிழந்து இருப்பதுடன் பல மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயர்வு செய்யும் நிலைக்கும் தள்ளியுள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து பல மாதங்களுக்கு எதிர்ப்பு தாக்குதல் மட்டுமே நடத்தி வந்த உக்ரைனிய ராணுவ படை கடந்த சில வாரங்களாக ரஷ்ய எல்லைகளுக்குள் புகுந்து பதிலடி தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ராணுவத்திற்காக ஆயுத உதவியை தொடர்ந்து கோரி வருகிறார்.
அந்த வகையில் தற்போது உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஜேர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு திசைகளில் இருந்து குர்ஸ்க் பகுதிக்கு ரஷ்யா கிட்டத்தட்ட 50,000 துருப்புகளை அனுப்பி இருப்பதாக உக்ரைனிய ராணுவ தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி(Oleksandr Syrskyi) தெரிவித்துள்ளார்.
மேலும் இது மற்ற பகுதியில் உள்ள ரஷ்ய படைகளுக்கு, குறிப்பாக கெர்சன், ஜபோரிஜியா மற்றும் முன்னணியில் உள்ள கிராமடோர்ஸ்க் பகுதிகளில் உள்ள ரஷ்ய படைகளுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.