முட்டை போண்டா
6 புரட்டாசி 2024 வெள்ளி 12:50 | பார்வைகள் : 898
பொதுவாகவே ஈவினிங் டீ டைமில் வடை, பஜ்ஜி, போண்டா போன்றவை பலர் சாப்பிட விரும்புவார்கள். அதிலும் குறிப்பாக டீ அல்லது காபி குடிக்கும் போது, சுட சுட ஏதாவது சாப்பிடுவது மிகவும் சூப்பராக இருக்கும். அந்த வகையில் இன்று உங்களுக்கு அப்படி ஏதாவது சாப்பிட விரும்பினால் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
ஆம், இன்று உங்களுக்காக முட்டையில் போண்டா செய்வது எப்படி என்று கொண்டு வந்துள்ளான் இந்த முட்டை போண்டா செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது மிகவும் சுலபமாக செய்துவிடலாம். முக்கியமாக பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு, இப்படி முட்டையில் போண்டா செய்து கொடுத்தால் அவர்கள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் முட்டையில் போண்டா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
முட்டை போண்டா செய்ய தேவையான பொருட்கள் :
முட்டை - 7 (வேக வைத்தது)
கடலை மாவு - 1 கப்
பச்சரிசி மாவு - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூம்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
முட்டை போண்டா செய்ய முதலில் வேகவைத்த முட்டையில் இருந்து அதன் ஓட்டை நீக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்த கடலை மாவு, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை நன்கு கலக்கவும். பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் இப்போது வேக வைத்த முட்டையை தயாரித்து வைத்த போண்டா மாவில் நன்கு முக்கி எடுத்து, பிறகு அதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதே போல எடுத்து வைத்த எல்லா முட்டைகளையும் பொறித்து எடுக்கவும். அவ்வளவுதான் ருசியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக முட்டை போண்டா தயார்.