"நான் பிரஞ்சு மக்களுக்கானவன், யாருடைய கண்காணிப்புக்குள்ளும் இல்லை" பிரதமர் Michel Barnier
8 புரட்டாசி 2024 ஞாயிறு 06:30 | பார்வைகள் : 3873
பிரதமர் Michel Barnier அவர்கள் பதவியேற்ற இரண்டாவது நாளான நேற்றைய தினம் (07/09) தனது நியமனத்துக்கு எதிராக நாடுமுளுவதும் மாபெரும் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக, பாரிசில் உள்ள சிறுவர்களுக்கான சிறப்பு மருத்துவமனையான 'Necker' மருத்துவ மனைக்கு சென்றிருந்தார்.
அங்கு நிலமைகளை ஆராய்ந்த பிரதமர் பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய செய்தியில் "கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்று முதலில் உறுதியளித்தார். பின்னர் "எதிர்கால சந்ததியினர் மீது நிதிக் கடனையோ அல்லது சுற்றுச்சூழல் கடனையோ அதிகரிக்க அரசாங்கம் விரும்பவில்லை" என்று கூறிய அவர் "பொதுப் பணத்தை சிறப்பாக நிர்வகிப்பதன் மூலம், பொதுச் செலவீனங்களின் செயல்திறனில் நாம் முன்னேற முடியும்" என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.
அதற்கு சற்று முன்னர் Rassemblement national கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் Jordan Bardella அவர்கள் "பிரதமர் Michel Barnier அவர்களை எமது கட்சி உண்ணிப்பாக கண்காணித்து வருகிறது" என தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் Michel Barnier 'நான் அனைத்து பிரெஞ்சு மக்களின் கண்காணிப்பின் கீழ் இருக்கிறேன், அரசாங்கம் அனைத்து பிரெஞ்சு மக்கள் மற்றும் அனைத்து அரசியல் குழுக்களின் ஜனநாயகக் கண்காணிப்பின் கீழ் உள்ளது" என்று பதிலளித்தார். அதேவேளை "நீங்கள் மிகவும் பொறுமையாக இருங்கள் எனக்கு சில வாரங்கள் கொடுங்கள், அக்டோபர் தொடக்கத்தில் பொதுக் கொள்கை அறிவிப்பை வெளியிடுவேன் என்று உறுதியளித்துள்ளார்.