மோசமான நிலையிலிருந்த இலங்கையை அரைச் சதங்களுடன் தனஞ்சய, கமிந்து மீட்டனர்
8 புரட்டாசி 2024 ஞாயிறு 08:23 | பார்வைகள் : 1401
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன், கெனிங்டன் கியா ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவதும் கடைசியுமான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் மிகவும் மோசமான நிலையில் இருந்த இலங்கையை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் மீட்டெடுத்தனர்.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று இங்கிலாந்தின் முதலாவது இன்னிங்ஸில் கடைசி 7 விக்கெட்களை 64 ஓட்டங்களுக்கு வீழ்த்திய இலங்கை, ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க திறமையாக துடுப்பெடுத்தாடி 64 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
ஏனைய முன்வரிசை வீரர்களான திமுத் கருணாரட்ன (9), குசல் மெண்டிஸ் (14), ஏஞ்சலோ மெத்யூஸ் (3), தினேஷ் சந்திமால் (0) ஆகியோர் பிராகாசிக்கத் தவறினர்.
இதன் காரணமாக இலங்கை அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
ஆனால், அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுத்தனர்.
தனஞ்சய டி சில்வா 10 பவுண்டறிகள் உட்பட 64 ஓட்டங்களுடனும் கமிந்து மெண்டிஸ் 6 பவுண்டறிகள் உட்பட 54 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் ஒல்லி ஸ்டோன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையம் அறிமுக வீரர் ஜொஷ் ஹல் 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கிறஸ் வோக்ஸ் 41 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முன்னதாக 3 விக்கெட் இழப்புக்கு 221 ஓட்டங்களிலிருந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.
ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பலமான நிலையில் இருந்த இங்கிலாந்து, கடைசி 7 விக்கெட்களை 64 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது.
முதலாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் 3 விக்கெட்களை மாத்திரம் வீழ்த்திய தமது வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு ஓய்வெடுத்து 2ஆம் நாள் இதனைவிட சிறப்பாக பந்துவீசி போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்துவார்கள் என முதலாம் நாள் ஆட்டம் முடிவடைந்த பின்னர் இலங்கையின் வேகப்பந்துவீச்சுப் பயிற்றுநர் ஆக்கிப் ஜாவேட் கூறியிருந்தார்.
அதனை நீரூபிக்கும் வகையில் இலங்கை பயன்படுத்திய நான்கு பந்துவீச்சாளர்களும் 8 விக்கெட்களைப் பகிர்ந்துகொண்டதுடன் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
தனது இன்னிங்ஸை 103 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அணித் தலைவர் ஒல்லி போப் 154 ஒட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். 151 பந்துகளை எதிர்கொண்ட அவர், 19 பவுண்டறிகளையும் 2 சிக்ஸ்களையும் விளாசியிருந்தார்.
அவரையும் ஆரம்ப வீரர் பென் டக்கெட்டையும் தவிர வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் தவறான, மோசமான அடி தெரிவுகளால் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்களை இழந்தனர்.
இங்கிலாந்தின் கடைசி 6 விக்கெட்கள் வெறும் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.
பந்துவீச்சில் மிலன் ரத்நாயக்க 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லஹிரு குமார 97 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 88 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.