வரலாற்றை மாற்றி எழுதிய நவிகோ!
17 ஐப்பசி 2021 ஞாயிறு 13:00 | பார்வைகள் : 20983
தொலைபேசி எப்படி வாழ்வில் ஒரு அங்கம் ஆகிப்போனதோ, அதுபோல் நவிகோ அட்டைகளும் ஒரு அங்கமாகி போனது. 20 வருடங்களை நிறைவு செய்த நவிகோ அட்டைகள், பிரெஞ்சு போக்குவரத்து துறையில் ஒரு பெரும் பாய்ச்சல்..? ஏன்.. இன்று பார்க்கலாம்…
Carte Navigo என அழைக்கப்படும் இந்த நவிகோ அட்டை முதன்முதலாக 2001 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இல் து பிரான்சுக்குள் போக்குவரத்து துறைக்கு பொறுப்பான Île-de-France Mobilités நிறுவனம் இந்த அட்டையினை கொண்டுவந்திருந்தது.
ஆரம்பத்தில் RFID எனும் தொழில்நுட்பத்தில் இயங்கிய இந்த அட்டைகள், பின்னர் 2013 ஆம் ஆண்டில் இருந்து NFC தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய வகையில் மாற்றப்பட்டது.
இலத்திரனியல் இயந்திரத்தின் அருகில் பிடித்தாலே தாமாக ‘ஸ்கேன்’ செய்து “நீங்கள் போகலாம்!”என பச்சை சிக்னல் தெரிவித்துவிடும்.
இந்த நவிகோ அட்டைகள் வந்தவுடன் நீண்ட வரிசையில் நின்று பயணச்சிட்டைகள் வாங்குவது முடிவுக்கு வந்தது. சிறிய அளவு இலாபம் கூட பயணிகளுக்கு இருந்தது.
இந்நிலையில், இதே நவிகோ அட்டையில் மற்றுமொரு வசதி பின்னர் கொண்டுவரப்பட்டது. மாதா மாதம் நீங்கள் நவிகோ அட்டையை பெறாமல்.. உங்கள் வங்கி கணக்கை இந்த நவிகோவுடன் இணைத்தது பெரும் பாய்ச்சல்.
இப்போது நீங்கள் உங்கள் வங்கியில் இருந்தே நவிகோ அட்டையை மீள் நிரப்பிக்கொள்ளலாம். இந்த வசதி மேலும் பயணிகளுக்கு நன்மைகளை கொண்டுவந்தது.
இதையெல்லாம் விடுவோம். இப்போது நவிகோ அட்டை மேலும் ஒரு படி மேலே சென்று ‘இன்விஸிபிள்’ ஆகியுள்ளது.
அதாவது முன்னரெல்லாம் நீங்கள் நவிகோ அட்டை என கூறி ஒரு ‘கார்ட்’ கொண்டு திரியவேண்டும். இப்போது அதையும் சுருக்கி.. மொபைலுக்குள் திணித்துவிட்டார்கள்.
2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்த ‘மொபைல் நவிகோ’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி உங்கள் தொலைபேசி செயலி ஊடாக நவிகோ அட்டையினை மீள் நிரப்பி விட்டு, இலத்திரனியல் இயந்திரத்திற்கு முன்பாக உங்கள் தொலைபேசியை பிடித்தாலே போதும். Good to go… போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான்.
நவிகோ அட்டைகளின் வருகை ஒரு புரட்சி என்றால்.. அதன் பிற்பாடு தொழில்நுட்பம் வளர.. நவிகோ அட்டைகளும் தங்களை அதற்கு ஏற்றால் போல் வடிவமைத்து.. பல வசதிகளை கொண்டுவந்தது. இதனாலேயே இது பிரெஞ்சு போக்குவரத்து துறையில் ஒரு புரட்சி என தாராளமாக சொல்லலாம்..
சுபம்!