அமெரிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு
10 புரட்டாசி 2024 செவ்வாய் 14:26 | பார்வைகள் : 2480
உக்ரைன் மற்றும் இஸ்ரேல் போர் நிலவரம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் அவசர சந்திப்பு ஒன்றை முன்னெடுக்க பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முடிவு செய்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரு தலைவர்களும் வெள்ளைமாளிகையில் இது தொடர்பில் சந்தித்துப் பேச உள்ளனர். ஆகஸ்டு 6ம் திகதி ரஷ்யாவுக்குள் அதிரடியாக ஊடுருவிய உக்ரைன் படைகள், மிக முக்கியமான இரு பாலங்களை தகர்த்ததுடன் தற்போது பல கிராமங்களையும் கைப்பற்றி முன்னேறி வருகின்றனர்.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ரஷ்யா எதிர்கொள்ளும் மிக மோசமான பின்னடைவு இதுவென்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், தொலைதூர ஏவுகணைகளை போரில் பயன்படுத்த அனுமதிக்குமாறு தமது ஆதரவு நாடுகளிடம் கோரிக்கை வைத்து வருகிறது உக்ரைன்.
அமெரிக்கா இந்த விவகாரத்தில் உடனடியாக உரிய முடிவெடுக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஜோ பைடனை சந்திக்கும் முடிவு குறித்து பேசியுள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், உக்ரைன் விவகாரம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அதே நிலை இஸ்ரேல் விவகாரத்திலும் ஏற்பட்டுள்ளது என்றார்.
ரஷ்யாவுக்குள் ஊடுருவியுள்ள உக்ரைன் படைகள் இரு பாலங்களை சேதப்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் ஸ்டார்மர், அவசர சந்திப்புக்கு காரணம் இதுவென்று குறிப்பிட்டுள்ளார்.
குர்ஸ்க் அணுமின் நிலையத்தை கைப்பற்றுவதே உக்ரைன் படைகளின் திட்டமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தரப்பு நம்புகிறது. மேலும், வடகொரியா அனுப்பியுள்ள ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் சிலவற்றை ரத்து செய்துள்ள விவகாரத்தில் அமெரிக்கா அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவலை ஸ்டார்மர் நிராகரித்துள்ளார்.
நடவடிக்கைக்கு முன்பும் அதன் பின்னரும் அமெரிக்காவை தொடர்பு கொண்டதாகவும், பிரித்தானியாவின் முடிவை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.